ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தங்கமங்கையின் வாழ்க்கை வரலாறு படம்
- IndiaGlitz, [Monday,October 02 2017]
இந்தியாவின் தங்கமங்கை என்று அழைக்கப்படுபவர் முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா என்பது அனைவரும் அறிந்ததே. கேரளாவை சேர்ந்த பி.டி.உஷா கடந்த 1986ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் நான்கு பிரிவுகளில் தங்கம் வென்று இந்தியர்களின் மனங்களில் குடிபுகுந்தார்.
இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளின் வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள் உருவாக்கப்பட்டு வெற்றி பெற்று வருகின்றன. தோனி, சச்சின், மேரி கோம் வரிசையில் தற்போது பி.டி.உஷாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமும் பாலிவுட்டில் தயாராகவுள்ளது. பி.டி.உஷாவின் குழந்தை பருவம், தடகள வீராங்கனை, தாய் மற்றும் பயிற்சியாளர் ஆகிய நான்கு கட்டங்களாக இந்த படத்தின் திரைக்கதை இருக்கும் என்று கருதப்படுகிறது.
ஏற்கனவே மேரிகோம் கேரக்டரில் நடித்து உலகப்புகழ் பெற்ற பிரியங்கா சோப்ரா, பி.டி.உஷா கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தை பிரபல மலையாள இயக்குனர் ரேவதி எஸ்.வர்மா இயக்கவுள்ளார். இந்த படம் ஆங்கிலம், இந்தி மற்றும் சீன மொழிகளில் உருவாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.