சிக்கலை ஏற்படுத்திய ப்ரியங்கா சோப்ராவின் செல்பி
- IndiaGlitz, [Saturday,June 03 2017]
பாரத பிரதமர் நரேந்திரமோடியை சமீபத்தில் ஜெர்மனி தலைநகர் பெர்லினில் சந்தித்த பிரபல பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா, அவர் முன் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்த ஸ்டில் பெரும் விமர்சனத்திற்கு ஆளானது. இந்த விமர்சனத்தின் தாக்கமே சமூக வலைத்தளங்களில் முடிவடையாத நிலையில் தற்போது மேலும் ஒரு ப்ரியங்கா சோப்ராவின் புகைப்படம் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
பெர்லினில் உள்ள ஹோலோகாஸ்ட் நினைவகம் என்பது சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்த ஒரு இடம். சுமார் 6 மில்லியன் ஐரோப்பிய யூதர்கள் நாஜிக்களால் கொல்லப்பட்ட கொடூர சம்பவத்தின் நினைவிடமாக இந்த இடம் உள்ளது. இந்த புனிதமான இடத்தில் ப்ரியங்கா சோப்ரா இரண்டு செல்பி புகைப்படங்களை எடுத்து அதனை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதோடு, அதில் சர்ச்சைக்குரிய வாசகங்களையும் பதிவு செய்துள்ளார். ஒரு செல்பியில் அவர் தனியாகவும் இன்னொரு செல்பியில் அவரும் அவரது சகோதரரும் உள்ளார்கள்
ஜெர்மனியர்கள் புனிதமாக கருதும் இந்த இடத்தில் செல்பி எடுத்து சர்ச்சைக்குரிய கருத்தையும் தெரிவித்த ப்ரியங்கா சோப்ராவுக்கு சமூக வலைத்தளத்தில் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இந்த நிலையில் இரண்டு புகைப்படங்களையும் தனது சமூக வலைத்தளத்தில் இருந்து ப்ரியங்கா அகற்றிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.