நடிகர் விஜய்யிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட பாடம் இதுதான்… பிரபல நடிகை நெகிழ்ச்சி!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்து தற்போது ஹாலிவுட் சினிமாக்களில் முத்திரை பதித்துவருபவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் தனது ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்திய முக்கிய பிரபலங்களுள் நடிகர் விஜய்யும் ஒருவர் என்று குறிப்பிட்டு பேசியிருக்கிறார். இந்தப் பதிவு ரசிகர்களிடையே கடும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
உலக அழகி பட்டம் வென்ற பிரியங்கா சோப்ரா தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான “தமிழன்“ திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பாலிவுட்டில் பல ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். அதேபோல “குவாண்டிகோ“ வெப் சீரிஸில் நடித்த இவர் தொடர்ந்து ஹாலிவுட் சினிமாக்களில் தற்போது பிசியாக நடித்து உலகப் பிரபலமாகி இருக்கிறார்.
சமீபத்தில் வெளியான ‘‘மேட்ரிக்ஸ்4“ திரைப்படத்திலும் நடிகை பிரியங்கா சோப்ரா நடித்திருந்தார். இந்நிலையில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகை பிரியங்கா தளபதி விஜய் குறித்தும் தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதில் “முதன் முதலில் நான் நடித்த சில படங்களில் தமிழ்ப் படமான ‘தமிழன்‘ மற்றும் ‘அண்டாஸ்‘, ‘தி ஹீரோ‘ ஆகிய இரு இந்தி படங்களும் அடங்கும். அன்றைய காலகட்டத்தில் அவை பெரிய படங்கள். நடிப்பு என்பது நாம் அணியும் ஆடைகளும் மேக்கப்பும் மட்டுமே என்ற எண்ணத்தோடு படப்பிடிப்புத் தளத்துக்குள் நடந்து சென்றது எனக்கு நினைவிருக்கிறது.
எனக்கு தமிழ்மொழி தெரியாததால் ‘தமிழன்‘ திரைப்படத்தில் நடித்தது எனக்கு மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. நான் வசனங்களைக் கேட்டு அவற்றை மனப்பாடம் செய்து, அதன் அர்த்தத்தை புரிந்துகொண்டு அதன் பிறகுதான் என்னுடைய வரிகளை பேசுவேன் ஆனால் என்னுடைய சக நடிகர் விஜய் நடிப்பதை பார்த்துக் கொண்டிருப்பது எனக்கு பிடிக்கும். என்னுடைய திரை வாழ்க்கையின் ஆரம்பத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய சிலரில் அவரும் ஒருவர்.
விஜய் படப்பிடிப்புத் தளத்தில் மிகவும் பணிவுடன் இருப்பார். ஒருமுறை படப்பிடிப்பு தளத்துக்குள் வந்துவிட்டால் அதன் பிறகு வெளியே செல்லவே மாட்டார். அதை இப்போதும் நான் கடைப்பிடித்து வருகிறேன். நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் என்றால் மட்டுமே தவிர மிகவும் அரிதாகத்தான் என்னுடைய கேரவனுக்குத் திரும்பிச் செல்வேன்“ என்று கூறியுள்ளார். தளபதி விஜய் குறித்து நடிகை பிரியங்கா சோப்ரா கூறிய இந்தக் கருத்து தற்போது ரசிகர்களிடையே ஆச்சர்யத்தையும் பாராட்டையும் பெற்றிருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Kiara Nithya
Contact at support@indiaglitz.com
Comments