திடீரென தனது ரோல்ஸ் ராய்ஸ் காரை விற்றுவிட்ட நடிகை பிரியங்கா சோப்ரா… என்ன காரணம்?

  • IndiaGlitz, [Wednesday,March 23 2022]

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் தற்போது ஹாலிவுட் வெப் சீரிஸ் மற்றும் படங்களிலும் நடித்துவருகிறார். அதோடு பாப் பாடகர் நிக் ஜோனாஸை திருமணம் செய்துகொண்ட பிறகு உலகப் பிரபலமாகவும் மாறிபோனார். இவர் தனது ரோல்ஸ் ராய்ஸ் காரை திடீரென விற்பனை செய்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

கடந்த 2000 ஆம் ஆண்டு உலக அழகியாகத் தேர்வுசெய்யப்பட்ட பிரியங்கா சோப்ரா பின்னர் பாலிவுட் சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தபோது கடந்த 2013 ஆம் ஆண்டு ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கியுள்ளார். உலகத்தின் பிரபலமான நிறுவனங்களில் ஒன்றான ரோல்ஸ் ராய்ஸின் ஹோஸ்ட் மாடலை இவர் நான்கரை கோடிக்கு வாங்கியதாகக் கூறப்படுகிறது. அந்த நிறுவனத்தின் அதிக விலை கார்களில் இதுவும் ஒன்றாக அப்போது இருந்தது.

விலை மதிப்புமிக்க காரை வாங்கிய நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது தனது ஹோஸ்ட் மாடல் ரோல்ஸ் ராய்ஸ் காரை பெங்களூரை சேர்ந்த தொழில் நிறுவனர் ஒருவருக்கு விற்பனை செய்துவிட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. காரணம் பாடகர் நிக் ஜேனாஸை திருமணம் செய்துகொண்ட பிறகு நடிகை பிரியங்கா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வருகிறார். அங்கு சொந்தமாக வீடு மற்றும் உணவகம் வைத்திருக்கும் நடிகை பிரியங்கா இந்தியாவிற்கு வருவது அரிதாகி விட்டது.

இதனால்தான் இந்தியாவில் உள்ள தனது ரோல்ஸ் ராய்ஸ் காரை அவர் விற்பனை செய்துள்ளார். ஆனால் எவ்வளவு விலைக்கு விற்றார் என்பதுபோன்ற தகவல்கள் எதுவும் வெளியாக வில்லை. சமீபத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் பாடகர் நிக் ஜோனாஸ் தம்பதிகளுக்கு அழகான பெண் குழந்தை பிறந்த தகவல் வெளியாகி இருந்தது. இதற்கு உலகம் முழுக்க உள்ள ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.