பெருமிதத்தால் கண்ணீர் சிந்தினேன்… பிரியங்கா சோப்ரா வெளியிட்ட வைரல் பதிவு!

  • IndiaGlitz, [Saturday,April 01 2023]

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி துவங்கியிருக்கும் புதிய கலாச்சார மையத்தின் துவக்க விழா மும்பையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா நெகிழ்ச்சியோடு சில கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்திய அளவில் மிகவும் வரவேற்பு பெற்ற நடிகையாக இருந்துவந்த நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் தொடர்ந்து நடித்து உலக அளவில் பிரபலமாகியுள்ளார். மேலும் பாப் பாடகர் நிக் ஜோனாஸை திருமணம் செய்துகொண்ட அவர் அமெரிக்காவிலேயே வசித்துவருவதும் இந்த ஜோடிக்கு மால்டி மேரி என்றொரு மகள் இருப்பதும் ரசிகர்களுக்குத் தெரிந்ததுதான். இந்நிலையில் நீடா அம்பானி துவங்கியிருக்கும் காலாச்சார மையத்தின் திறப்பு விழாவிற்காக நடிகை பிரியங்கா சோப்ரா தனது கணவர் மற்றும் மகளுடன் இந்தியாவிற்கு வந்துள்ளார்.

இந்நிலையில் கலாச்சார மையத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்ட நடிகை பிரியங்கா சோப்ரா அன்றிரவு நடைபெற்ற ரெட் கார்ப்பெட் நிகழ்விலும் தனது கணவர் நிக்குடன் கலந்துகொண்டார். இதில் பிரியங்கா பளபளக்கும் கோல்டன் நிற கவுனையும் நிக் கறுப்பு நிற உடையையும் அணிந்திருந்தனர். இந்த நிகழ்வு குறித்து கருத்துப் பதிவிட்ட அவர், நேற்றிரவு இசை நிகழ்ச்சியில் நமது தேசத்தின் முகத்தைப் பார்தது நான் மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். பெருமிதத்தால் சில கண்ணீர் சிந்தியிருக்கலாம். நமது தேசத்தின் வரலாறு மிகவும் பிரமிக்க வைக்கிறது. உங்களின் அயராத பங்களிப்பு மற்றும் கலைக்கான அர்ப்பணிப்புக்காக நான் உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் நான் பாலிவுட் சினிமாவிலிருந்து ஓரம் கட்டப்பட்டேன் என்ற நடிகை பிரியங்கா சோப்ரா நேர்காணல் ஒன்றின்போது கருத்துக் கூறியிருந்தார். இதனால் பாலிவுட் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது கலாச்சார மையத்தின் திறப்பு விழாவிற்கு வருகை தந்த அவர் இந்தியர்களின் கலைப்பணியைப் பாராட்டி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.