முதல்முறையாக மகளின் முகத்தைக் காட்டிய நடிகை பிரியங்கா சோப்ரா… க்யூட் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Wednesday,February 01 2023]

பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா கடந்த ஆண்டு வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட தகவல் ரசிகர்களைக் கடும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் அவர் தன்னுடைய குழந்தையின் முகத்தை முதல் முறையாக வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார். அதுகுறித்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த 2018 ஆம் ஆண்டு பாப் இசை பாடகர் நிக் ஜோனாஸ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஏற்கனவே “க்வாண்டிகோ“ தொலைக்காட்சி தொடர் மூலம் ஹாலிவுட்டில் கால்பதித்திருந்த அவர் திருமணத்திற்குப் பிறகு அமெரிக்காவிலேயே தங்கி தொடர்ந்து, பல ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தனக்கு வாடகைத்தாய் மூலம் பெண் குழந்தை பிறந்த செய்தியை சமூகவலைத்தளங்கள் மூலமாகப் பகிர்ந்து கொண்டார். இதையடுத்து அவருடைய ரசிகர்கள் பலரும் பாராட்டை வெளியிட்டு வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது குழந்தை மால்டி மேரியின் புகைப்படத்தை வெளியிட்ட அவர், முகத்தை மட்டும் ஈமோஜி மூலம் மறைத்திருந்தார். மேலும் பல மாதங்களாகத் தனது குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்ததாகவும் தனக்கு மருத்துவ ரீதியாக பிரச்சனை இருந்ததால்தான் வாடகைத்தாய் மூலமாகக் குழந்தைப் பெற்றுக்கொண்டேன் எனவும் விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா தனது கணவரான நிக் ஜோனாஸுடன் இணைந்து வாக் ஆஃப் ஃபேம் எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அந்நிகழ்ச்சியில் நிக்குடன் ஜோனாஸ் சகோதரர்கள் கெவின், ஜோவும் கலந்துகொண்டனர். அப்போது நடிகை பிரியங்கா தனது செல்ல மகளான மால்டி மேரியின் முகத்தை முதன்முதலாக வெளியுலகிற்குக் காட்டினார். இதையடுத்து மேடையில் பேசிய நிக் தனது செல்ல மகளைக் குறித்து ”Super Chill“ என்று கூறியவாறே உற்சாகம் அடைந்தார். இதுகுறித்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வருகிறது.