ஒருவழியாக சம ஊதியம் வாங்கி விட்டேன்… விஜய் பட நடிகையின் உற்சாகமான பேட்டி!

  • IndiaGlitz, [Wednesday,May 10 2023]

விஜய் நடிப்பில் உருவான ‘தமிழன்’ திரைப்படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. அவர் தற்போது 23 வருடம் கழித்து ஒருவழியாக சம ஊதியம் வாங்கிவிட்டேன். கடவுளுக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர்.

2000 இல் உலக அழகிப்பட்டம் வென்ற பிரியங்கா சோப்ரா முதல் முறையாக நடிகர் விஜய் நடிப்பில் உருவான தமிழன் திரைப்படம் மூலம் சினிமாவில் காலடி எடுத்துவைத்தார். அதைத்தொடர்ந்து பாலிவுட்டில் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். ‘டான்‘, ‘க்ரஷ்‘, ‘ஒம் சாந்தி ஓம்‘, ‘பேஷன்‘, ‘ஃபர்பி‘ என்று கமர்ஷியல் மற்றும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவமுள்ள பல படங்களில் நடித்துள்ளார். ஏறக்குறைய அனைத்து பாலிவுட் முன்னணி நடிகர்களுடனும் அவர் இணைந்து நடித்துள்ளார்.

அதேபோல ஹாலிவுட்டில் ‘குவாண்டிகோ‘, ‘ஃபே ஆஃப் வாட்ச்’, ‘மேட்ரிக்ஸ்’ போன்ற பிரம்மாண்ட படைப்புகளிலும் நடித்து முடித்துள்ளார். ஆனாலும் 23 வருடங்களில் கிடைக்காத சம ஊதியம் தற்போது உலகம் முழுக்க பிரபலமடைந்து இருக்கும் ‘சிட்டாடல்’ வெப் தொடரில் தனக்கு வழங்கப்பட்டு இருப்பதாக நடிகை பிரியங்கா சோப்ரா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து பேசிய அவர் அமேசான் பிரைம் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சியின் தலைவர் ஜெனிபர் சால்கேவால் தான் இது சாத்தியமாயிற்று. எனவேதான் பெண்கள் முடிவெடுக்கும் இடத்திற்கு வளரவேண்டும். அப்போது பலரது வாழ்க்கை மாறும்.

அதேபோல நீங்களும் சம ஊதியம் கேட்கலாம். நான் நீண்டகாலமாக இதைச் செய்து வருகிறேன். சிட்டாடலுக்கு பிறகு நான் ஏற்கும் ஒவ்வொரு வேலையிலும் நான் சமத்துவத்தைப் பெற்றுள்ளேன். என் வாழ்க்கை மாறியிருக்கிறது. கடவுளுக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார். இதனால் நீண்டகாலத் தேடலை கண்டடைந்திருக்கும் நடிகை பிரியங்கா சோப்ராவிற்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.