இந்த பந்தம் என்றும் மாறாது… திருமணநாளில் அன்பு வார்த்தை பகிர்ந்த நட்சத்திர ஜோடி!

ஹாலிவுட்டில் நட்சத்திர ஜோடிகளாக வலம்வரும் நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் பாடகர் நிக் ஜோனாஸ் இருவரும் தங்களது 3 ஆண்டு திருமணநாளை நேற்று கொண்டாடியுள்ளனர். இதையடுத்து நிக் ஜோனாஸ் மற்றும் பிரியங்கா இருவருடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களும் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுவருகிறது.

முன்னாள் உலக அழகியான பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். அதையடுத்து ஒருசில ஹாலிவுட் சினிமா மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்து வரவேற்பு பெற்ற அவர் தன்னைவிட 11 வயது இளைய பாப் பாடகர் மற்றும் நடிகர் நிக் ஜோனாசை காதலித்து கடந்த 2018 டிசம்பர் 1 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார்.

ஜோத்பூர் அரண்மனையில் கோலாகலமாக நடைபெற்ற இந்தத் திருமணத்திற்கு ரசிகர்கள், பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்துத் தெரிவித்து இருந்தனர். தற்போது இந்தத் தம்பதிகள் லாஸ் ஏஞ்சல் நகரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை பிரியங்கா தற்போது citadel வெப் சீரிஸின் படப்பிடிப்பிற்காக லண்டனில் தங்கியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு லண்டனில் நடைபெற்ற பாரிஸ் பேஷன் விழாவில் கலந்து கொண்டு கலக்கிய இந்த நட்சத்திர ஜோடி தற்போது தங்களது திருமணநாளை லண்டனில் உள்ள வீட்டில் சிறப்பித்துள்ளனர். எளிமையாக நடைபெற்ற இந்தக் கொண்டாட்டம் குறித்து நிக் ஜோனாஸ் Forever என்ற வார்த்தையுடன் வீடியோ வெளியிட்டு உள்ளார்.

அதேபோல நடிகை பிரியங்கா “Found You, marry you, keeping You“ என்று தன்னுடைய அன்பு மொழிகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் நிக் ஜோனாஸ்,பிரியங்கா சோப்ரா ஜோடிக்கு ரசிகர்கள், பிரபலங்கள் எனப் பலரும் தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.