கொழுந்துவிட்டு எரியும் பிரியங்கா விவகாரம்.. பட்டாசு வெடித்து கொண்டாடிய மணிமேகலை..!

  • IndiaGlitz, [Friday,September 20 2024]

ஒரு பக்கம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரியங்கா சம்பந்தப்பட்ட விவகாரம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் தனது கணவருடன் பட்டாசு வெடித்து மணிமேகலை கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் ரசிக்கும் வகையில் இருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு யார் கண் பட்டதோ தெரியவில்லை, நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் வெங்கடேஷ் பட் விலகினார், அதன் பின் தயாரிப்பு நிறுவனம், இயக்குநர் உள்பட பலரும் விளங்கிய நிலையில், தற்போது திடீரென மணிமேகலை நிகழ்ச்சியில் இருந்து விலகி உள்ளார்.

இந்த நிகழ்ச்சியின் குக்குகளில் ஒருவரான பிரியங்காவுக்கும் அவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மணிமேகலை விலகியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து திரை உலக பிரபலங்களும் , சின்னத்திரை உலக பிரபலங்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களிலும் இந்த பிரச்சனை குறித்து செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், மணிமேகலை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், தனது கணவர் ஹுசைனுடன் சேர்ந்து சிவகாசிக்கு சென்று பட்டாசு வாங்கிய காட்சிகளை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவின் ஆரம்பத்தில், தனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த மணிமேகலை, இதுகுறித்து அடுத்தடுத்த வீடியோக்களில் பேசலாம், என்று கூறியுள்ளார்.

மேலும், சிவகாசியில் வாங்கிய பட்டாசுகளை அங்கேயே வெடித்து மகிழ்ந்த காட்சிகளும் அவரது வீடியோவில் இடம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.