நான் எம்.ஜி.ஆர்-ஜெயலலிதாவுக்கு பிறந்த மகள். இன்னொரு அதிமுகவா?
- IndiaGlitz, [Monday,March 06 2017]
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பின்னர் அதிமுக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக பிளந்தது. மேலும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் தனிக்கட்சி ஆரம்பித்து தனி பாதையில் செல்கிறார். இந்நிலையில் தான் ஜெயலலிதாவின் மகள் என்றும் தனது தந்தை மறைந்த எம்.ஜி.ராமச்சந்திரன் என்று கூறிக்கொண்டு ஒருவர் திடீரென கிளம்பியுள்ளார்.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த ப்ரியா மஹாலட்சுமி என்பவர் கூறியதாவது: என் பெயர் ப்ரியா மஹாலட்சுமி, என் தாயார் ஜெயலலிதா, என் தந்தை மறைந்த எம்.ஜி. ராமச்சந்திரன். நான் எம்ஜிஆரின் மகள். சசிகலவின் சதியால் அதிகமாக பாதிக்கப்பட்டு பல சோதனைக்கு ஆளாகியவள் நான். ஜெயலலிதாவுடனே சசிகலா இருந்ததால் பயம் காரணமாக இவ்வளவு நாள் அமைதியாக இருந்துவிட்டேன்.
ஜெயலலிதாவின் உயிர் போன பின்னர் யாரிடமும் கேள்வி கேட்காமல் யாரிடமும் அனுமதி கேட்காமல் போயஸ் கார்டனில் சசிகலா இருப்பதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்' என்று கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் மரணம் குறித்த மர்மமே இன்னும் விலகாத நிலையில் திடீரென தான் ஜெயலலிதாவின் மகள் என்றும் தனது தந்தை எம்.ஜி.ஆர் என்றும் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரால் அதிமுகவில் இன்னொரு பிரிவு ஏற்படுமா? என்று மக்கள் கவலையுடன் பார்த்து வருகின்றனர்.