தனியார் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வா??? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!!

  • IndiaGlitz, [Saturday,December 12 2020]

 

தமிழகத்தில் தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வுகளை ஆன்லைனில் நடத்திக் கொள்ளலாம் எனப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் முதல் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு இருக்கின்றன. இதனால் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைனில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை முதல் கல்லூரிகளில் பயிலும் இறுதியாண்டு மாணவர்கள் மற்றும் ஆய்வு மாணவர்கள் கல்லூரிக்கு வரலாம் என்ற அறிவிப்பு வெளியானது.

ஆனால் அதைத் தொடர்ந்து தற்போது அண்ணா பல்கலைக் கழகத்தின் அனைத்து வகுப்பு பாடங்களும் வரும் ஜனவரி வரை ஆன்லைனில் மட்டுமே நடத்தப்படும் என்ற அறிவிப்பை அண்ணாப் பல்கலைக் கழக நிர்வாகம் வெளியிட்டு இருக்கிறது. இந்நிலையில் தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வுகளை ஆன்லைனில் நடத்தலாம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

மேலும் “தனியார் பள்ளிகள் ஆன்லைனில் அரையாண்டு தேர்வை நடத்தலாம். அதற்கு ஆட்சேபம் இல்லை. அரசு பள்ளிகளின் அரையாண்டு தேர்வை தமிழக அரசு ஒத்தி வைத்து உள்ளது. அரசு சரியாக செயல்படுவதால் பள்ளிக் கல்வித்துறை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட தேவையில்லை. 50% பாடங்கள் குறைப்பு மட்டுமின்றி நடத்தப்படும் பாடங்களில் இருந்து மட்டும்தான் கேள்விகள் கேட்கப்படும்” என செங்கோட்டையன் குறிப்பிட்டு உள்ளார்.