ஒரே ஒரு அரிசிக்கஞ்சிக்கு ரூ.1380 பில்: மருத்துவமனை நிர்வாகத்தை அலற வைத்த கொரோனா நோயாளி!
- IndiaGlitz, [Sunday,May 09 2021]
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களுக்கு மருத்துவமனைகளில் இடம் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் இடம் கிடைத்த மருத்துவமனைகளிலும் கொள்ளை லாபம் அடிக்கும் சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது
அந்த வகையில் கேரளாவில் உள்ள எர்ணாகுளத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற மருத்துவமனை ஒன்றில் சமீபத்தில் சபீனா என்ற பெண் கொரோனாவுக்கு சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதல் நாளில் அரிசி கஞ்சியும் ஒரு சில மாத்திரைகளை மட்டும் கொடுத்து இருந்தனர். ஆனால் அட்மிட் ஆகி பல மணி நேரம் ஆகியும் மருத்துவர் வரவில்லை, சிகிச்சையும் ஆரம்பிக்கவில்லை என்பதால் அதிர்ச்சி அடைந்த சபீனா உறவினர்களுக்கு தகவல் கொடுத்து வேறு மருத்துவமனைக்கு மாற முடிவு செய்தார்
ஏற்கனவே அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது ரூபாய் 50,000 முன் பணம் செலுத்தி இருந்த நிலையில் 24, 760 ரூபாய் கழித்துக் கொண்டு மீதித் தொகையை மருத்துவமனை நிர்வாகம் கொடுத்துள்ளது. எந்தவித சிகிச்சையும் அளிக்காமல் இவ்வளவு தொகை பில் எப்படி வந்தது என அதிர்ச்சி அடைந்து சபீனா பில்லை பார்த்தபோது அதில் அரிசி கஞ்சிக்கு ரூ.1,380, பி.பி.ஈ கிட் வகைக்கு ரூ.10,416 என பில் போடப்பட்டுள்ளது
இதனை அடுத்து அவர் வேறு மருத்துவமனைக்கு மாறி தற்போது குணமாகி உள்ளார். இந்த நிலையில் தனக்கு சிகிச்சை செய்யாமலேயே கொள்ளை கட்டணம் வசூலித்ததாக சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது சபீனா போலீசில் புகார் அளித்துள்ளார். அநியாய கட்டணம் வசூலிப்பதாக அவர் அளித்துள்ள புகார் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தொடங்கியதை அடுத்து மருத்துவமனை நிர்வாகம் அலறி அடித்துக் கொண்டு சபீனாவிடம் புகாரை வாபஸ் பெறுமாறும் அவர் கட்டிய பணம் முழுவதையும் திருப்பி கொடுத்துவிடுவதாகவும் தற்போது கெஞ்சி கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.