கொரோனாவுக்காக தனியார் மருத்துவமனை சென்றால் சொத்தை விற்கணுமா? கட்டணம் விபரம்

தமிழகத்தில் கொரனோ வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் ஆயிரக்கணக்கில் குவிந்து வருவதால் அரசு மருத்துவமனைகளில் கிட்டத்தட்ட அனைத்திலும் கொரோனா நோயாளிகள் நிரம்பி விட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து கொரனோவால் இனி பாதிக்கப்படுபவர்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் கொரனோ சிகிச்சைக்காக அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், இதுகுறித்த கட்டணத்தை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் கடந்த சில நாட்களாக எழுந்து வருகின்றன. இந்த நிலையில் தற்போது ஐ.எம்.ஏ தமிழக பிரிவு, கொரனோ சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகள் பெற வேண்டிய கட்டணம் குறித்த பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது.

இதன்படி லேசான பாதிப்புள்ள நோயாளிக்கு 10 நாட்கள் சிகிச்சை கட்டணமாக ரூ.2,31,820 வசூலிக்கலாம் என்றும், அல்லது தினமும் ரூ.23,000 வசூலிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. அதேபோல் திவிர சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிக்கு 17 நாட்கள் கட்டணமாக ரூ.4,31,411 வசூலிக்கலாம் என்றும், அல்லது தினமும் ரூ.43,000 வசூலிக்கலாம் என்றும் ஐ.எம்.ஏ அறிவித்துள்ளது. மேலும் மருத்துவர்கள், தனிமைப்படுத்தும் பணியாளர்களுக்கான கட்டணமாக ஒரு நாளைக்கு ரூ.9600 வரை நிர்ணயிக்கவும் ஐஎம்ஏ தமிழகப் பிரிவு பரிந்துரை செய்துள்ளது.

ஐ.எம்.ஏ நிர்ணயம் செய்துள்ள இந்த கட்டணம் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. கொரோனா சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனை சென்றால் சொத்தை விற்று தான் செல்ல வேண்டும் என்ற நிலை இருப்பதாக நெட்டிசன்கள் தங்களுடைய கருத்தை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.