கொரோனா பீதியில் சுரங்கம் தோண்டி தப்பிக்க முயன்ற சிறை கைதிகள்!!!
- IndiaGlitz, [Saturday,May 02 2020]
கொரோனா பரவல் உலகையே உலுக்கிக்கொண்டிருக்கும் சமயத்தில் சிறை கைதிகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படலாம் என்ற பதட்டம் நிலவிவருகிறது. இந்நிலையில் சில நாடுகள், சிறு குற்றங்களை செய்து சிறைக்கு வந்தவர்களை விடுவித்து வருகிறது. மேலும் அவர்களை வீடுகளில் சென்று தனிமைப்படுத்திக் கொள்ளும்படியும் அறிவுறுத்தியிருக்கிறது.ஆனால் பெரும்பாலான நாடுகள் சிறை கைதிகளை விடுவிடுக்கும் நடிவடிக்கைகளை மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தி வருகின்றன.
தற்போது, கொரோனா பரவல் அச்சத்தினால் கொலாம்பியாவின் சிறையொன்றில் கைதிகள் சுரங்கத்தைத் தோண்டி தப்பிக்க முயன்ற சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கொலாம்பியாவின் பல சிறைகளிலும் கைதிகள், பணியாளர்கள், காவலர்கள் எனப் பலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. அரசு சிறு குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்களை வெளியே அனுப்பும்படி கூறியிருந்தாலும் பெரும்பாலான சிறைகள் இன்னும் நிரம்பியே காணப்படுகின்றன.
கொலாம்பியாவின் வில்லாவிசென்ஸியோ எனும் இடத்தில் அமைந்துள்ள சிறையில் 314 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இவர்களில் கைதிகள் மட்டுமல்லாது சமையல் காரர்கள், காவலர்கள் என அனைவருக்கும் நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் கொரோனா பற்றிய அச்சத்தில் சிறைக் கைதிகள் உறைந்துள்ளனர். அங்குள்ள 7 சிறை கைதிகள் ஒருவரின் அறைக்குள் இருந்து தாங்களே தயாரித்த ஆயுதங்களை வைத்து ஒரு சுரங்கத்தை உண்டாக்கி தப்பிக்க முயன்றனர் என்றும் இந்த முயற்சியை அதிகாரிகள் முறியடித்ததாகவும் செய்திகள் வெளியாகியிருக்கிறது. இந்த ஒரு சிறையில் மட்டும் மிக நெருக்கமான முறையில் 1700 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொரோனா பதற்றத்தால் தற்போது கைதிகள் தங்களை விடுவிக்கும்படி போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் அச்சிறையில் கடும் பதற்றம் நிலவிவருகிறது. முன்னதாக கொலம்பியாவின் மொடேலோ சிறையில் இதேபோன்று நடைபெற்ற கலவரத்தில் 20 கைதிகள் கொலலப்பட்டனர். கொலாம்பியாவின் பல சிறைகளிலும் இதே போன்ற பதற்றம் நிலவுவதால் அரசாங்கம் துரிதமான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.