'சூர்யா 42' படத்தில் இணையும் இளவரசி நூர்ஜஹான்? 

  • IndiaGlitz, [Saturday,January 28 2023]

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’சூர்யா 42’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் இளவரசி நூர்ஜஹான் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

கடந்த ஆண்டு வெளியான வெற்றி படங்களில் ஒன்று 'சீதாராமம்’ என்பதும் துல்கர் சல்மான், ராஷ்மிகா நடித்திருந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தில் இளவரசி நூர்ஜஹான் என்ற கேரக்டரில் மிருணால் தாக்கூர் நடித்திருந்தார் என்பதும், இவரது நடிப்பிற்கு மிகப்பெரிய பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ’சூர்யா 42 படத்திலும் மிருணால் தாக்கூர் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ’சூர்யா 42 படத்தில் சரித்திர கால காட்சிகளில் இவர் நடிக்க இருப்பதாக கூறப்படுவதால் மீண்டும் அவர் இளவரசியாக நடிக்க வாய்ப்பு உள்ளது. இவரது ஆட்சியின் படப்பிடிப்புகள் அடுத்த மாதம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. மிருணால் தாக்கூர் மட்டுமின்றி மேலும் சில கோலிவுட் உள்பட அகில இந்திய பிரபலங்கள் இந்த படத்தில் இணைய இருப்பதாக கூறப்படுவதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

தமிழ் உள்பட 13 மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ’வீர்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சூர்யா ஜோடியாக திஷா பதானி நடித்து வரும் இந்த படத்தில் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர் என்பதும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.