கொல்கத்தா ஃப்ளே ஆஃப் கனவைக் கலைக்குமா சென்னை?
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 49ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கும் 13ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கிட்டத்தட்டம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் துபாயில் நடக்கும் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. கொல்கத்தா அணியை பொறுத்தவரையில் 12 போட்டிகளில் பங்கேற்று 12 புள்ளிகளுடன் உள்ளது அதனால் எஞ்சியுள்ள இரு போட்டிகளில் வெற்றி பெற்று முதல் நான்கு இடத்திற்குள் முன்னேற முயற்சிக்கும். மறுபுறம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்த தொடரை கவுரவத்துடன் முடிக்க எஞ்சிய போட்டிகளில் வெற்றி பெற முயற்சிக்கும்.
ருதுராஜ் நம்பிக்கை
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரையில், இந்தாண்டு தொடர் முடிவுக்கு வந்த நிலையில் எதிர்காலத்திற்குச் சிறந்த இளம் வீரர்கள் கொண்ட அணியை உருவாக்கிக் கொடுக்க வேண்டிய பொறுப்பு கேப்டன் மகேந்திர சிங் தோனி வசம் உள்ளது. அடுத்த ஆண்டும் இவர் கேப்டனாக நீடிப்பார் என்ற தகவல் சென்னை ரசிகர்களுக்கு ஆறுதலான விஷயம் என்றாலும் கேப்டன் ஒருவரால் மட்டும் வெற்றியை வசமாக்க முடியாது. அதில் முதல் படிக்கட்டாக ருதுராஜ் நம்பிக்கை அளிக்கிறார். இவர் இன்றும் தனது சிறந்த ஃபார்மை தொடர்வார் என நம்பலாம்.
பவுலிங்கை பொறுத்தவரையில் பெங்களூரு அணிக்கு எதிராக வெளிப்பட்ட சிறந்த ஃபார்மை இன்றும் சென்னை பவுலர்கள் தொடர்வது அவசியம்.
வாய்ப்பு எப்படி
கொல்கத்தா அணியைப் பொறுத்தவரையில் தற்போது 12 புள்ளிகளுடன் உள்ளதால், எஞ்சிய இரு போட்டிகளில் வென்றால் 16 புள்ளிகள் பெறும். ஒரு போட்டியில் வென்றால் 14 புள்ளிகள் பெறும். 14 புள்ளிகளோடு நின்றுவிட்டால் ரன் ரேட் சிக்கல் இருக்கும் என்பதால் இரு போட்டிகளிலும் வெல்லவே கொல்கத்தா முயற்சிக்கும்.
ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக எழுச்சி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்துவது கொல்கத்தா அணிக்கு எளிதான காரியம் அல்ல. குறிப்பாக அந்த அணியின் நிலையில்லாத பேட்டிங் ஆர்டர் அந்த அணியின் கேப்டன் இயான் மார்கனுக்கு மிகப் பெரிய தலைவலியாக உள்ளது. டார் ஆர்டர் பேட்ஸ்மேன்க ள் அசத்தும் பட்சத்தில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்புகின்றனர். இதனால் பேட்டிங் வரிசையை அந்த அணி தொடர்ந்து மாற்றி வருகிறது. இதற்குத் தீர்வு காண வேண்டிய கட்டாயத்தில் கொல்கத்தா அணி உள்ளது.
பவுலிங் ஆறுதல்
பேட்டிங் சோதனையாக இருந்தாலும், பவுலிங்கில் கொல்கத்தா அணி ஆறுதல் அளிக்கிறது. குறிப்பாகத் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி சுழலில் அசத்துகிறார். இவருடன் பேட் கம்மின்ஸ் விக்கெட் வீழ்த்த முயற்சிக்க வேண்டும். குறிப்பாகக் கடந்த போட்டியில் அடைந்த தோல்வியிலிருந்து எழுச்சி பெற வேண்டிய கட்டாயத்தில் கொல்கத்தா அணி உள்ளது.
என்ன வித்தியாசம்
இன்றைய போட்டியில் பங்கேற்கும் இரு அணிகளான கொல்கத்தா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே உள்ள மிகப்பெரிய வித்தியாசமே அந்த அணிகளுக்கு உள்ள நெருக்கடி தான். சென்னை அணி ஏற்கனவே ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாது என்பதால் எவ்வித நெருக்கடியும் இல்லாமல் வீரர்கள் விளையாட முடியும். ஆனால் கொல்கத்தா அணிக்கு, வெற்றி பெற்று 2 புள்ளிகளைப் பெற்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடி உள்ளது. இந்த நெருக்கடியை அது எப்படிச் சமாளிக்கிறது என்பதைப் பொறுத்தே அதன் பிளே ஆஃப் வாய்ப்பு அமையும்.
உத்தேச லெவன் அணி
சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராக் கெய்க்வாட், ஃபாஃப் டூ பிளஸி, அம்பத்தி ராயுடு, ஜகதீசன், சாம் கரன், ரவீந்திர ஜடேஜா, மிட்சல் சாண்ட்னர், தீபக் சாஹர், இம்ரான் தாஹிர், மோனு குமார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ஷுப்மன் கில், நிதீஷ் ராணா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக், இயான் மார்கன், சுனில் நரேன், கமலேஷ் நாகர்கோடி, பாட் கம்மின்ஸ், லூக்கி ஃபெர்குசன், வருண் சக்கரவர்த்தி, பிரசித் கிருஷ்ணா.