அரசியல் அறிவிப்புக்கு பின் ரஜினி ரசிகர் மன்றத்தின் முக்கிய அறிக்கை
- IndiaGlitz, [Saturday,January 06 2018]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி அரசியல் வருகையை உறுதி செய்தார். வெகுவிரைவில் கட்சியின் பெயர், சின்னம், கொடி மற்றும் கட்சியின் நிர்வாகிகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தனியார் செய்தி தொலைக்காட்சிகளில் ரஜினிக்கு ஆதரவாக ஒருசிலர் விவாதத்தில் கலந்து கொண்டு ரஜினியின் அரசியல் குறித்து பேசி வருகின்றனர். இதுகுறித்து சற்றுமுன்னர் ரஜினிகாந்த் சார்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சமீபகாலமாக தொலைக்காட்சி விவாதங்களில் ரஜினி ஆதரவாளர் அல்லது ரஜினி ரசிகர் என்ற பெயரில் சிலர் பங்கேற்று தங்கள் சொந்த கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
அகில இந்திய ரஜினி ரசிகர் மன்றம் மற்றும் ரஜினி மக்கள் மன்றம் சார்பாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க யாரையும் நாங்கள் நியமனம் செய்யவில்லை என்பதையும், விவாதங்களில் தற்போது பங்கேற்று வருபவர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்கள் எங்களால் அங்கீகரிக்கப்பட்டதல்ல என்பதையும் பொதுமக்களுக்கு தெரிவித்து கொள்கிறோம்
ஏற்கனவே தலைவர் திரு.ரஜினிகாந்த் கூறியது போல், மன்ற உறுப்பினர்கள் அன்றாடம் நடக்கும் அரசியல் விவாதங்களில் பேசாமல், கட்சி அறிவிப்பு வரும் வரை நமது நேரத்தை மன்றத்தின் கட்டமைப்பை உருவாக்குவதில் செலவழிக்க வேண்டும் என்பதை அறிந்து நாம் செயல்பட்டு கொண்டிருப்பதால் மன்ற உறுப்பினர்கள் யாரும் இப்படிப்பட்ட விவாதங்களில் பங்கேற்க எங்களால் நியமனம் செய்யப்படவில்லை என்பதை தெரிவித்து கொண்டு, மேலும் தலைவர் ரஜினிகாந்த் பெயரில் அனுமதிக்கப்படாத யாரும் இந்த விவாதங்களில் பங்கேற்பது முறையல்ல என்பதால் தொலைக்காட்சி செய்தி நிறுவனங்கள் 'ரஜினி ஆதரவாளர்' அல்லது ரஜினி ரசிகர் என்ற பெயரில் தனிநபர் யாரையும் சித்தரிக்க வேண்டாம் என்றூ அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்