பிரதமர் உள்பட அனைத்து எம்பிக்களுக்கும் சம்பளம் குறைப்பு: 2 ஆண்டுக்கு எம்பி நிதியும் கிடையாது
- IndiaGlitz, [Monday,April 06 2020]
பிரதமர் மற்றும் அமைச்சர்களின் ஊதியமும் 30 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் என மத்திய அமைச்சரவை சற்றுமுன் முடிவு செய்துள்ளது. அதேபோல் குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், அனைத்து மாநில ஆளுநர்களும் ஒரு வருடத்திற்கு தாமாக முன்வந்து தங்களின் சம்பளத்தின் 30% குறைத்துக் கொண்டுள்ளனர் என் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி, பிரதமர் உள்பட அனைவரின் சம்பளம் குறைத்ததால் கிடைக்கும் நிதி, கொரோனா நிவாரண நிதியில் சேர்க்கப்படும் என்றும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த அவசர சட்டம் உடனடியாக அமலுக்கு வந்தது என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
அதேபோல் எம்.பி-க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்திவைக்கப்படுவதாகவும், எம்.பி-க்களின் தலா 10 கோடி ரூபாய் நிதி அரசு நிதியில் சேர்க்கப்படும் என்றும் மத்திய அமைச்சரவை அறிவித்துள்ளது. மத்திய அமைச்சரவையின் இந்த முடிவுக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது