ஜனாதிபதி தேர்தல் தேதி அறிவிப்பு
- IndiaGlitz, [Thursday,June 08 2017]
இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவர்களின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதத்துடன் முடிவடைவதால் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய நடைபெறும் தேர்தலின் தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைய வட்டாரங்களில் இருந்து செய்தி வெளிவந்த நிலையில் சற்று முன்னர் ஜனாதிபதி தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இதன்படி அடுத்த ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தல் வரும் ஜூலை மாதம் 17ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தேர்தல் ஆணையத் தலைவர் நஜிம் ஜைதி சற்று முன்னர் அறிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் தெரிவித்த தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி ரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்தல் நடைபெறும். ஜனாதிபதி தேர்தலில் எம்.பிக்கள் அனைவரும் வாக்களிப்பர். மாநில மக்கள் எண்ணிக்கை அடிப்படையில் அவர்களின் வாக்கு மதிப்பீடு செய்யப்படும். ஜூன் 14 ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூலை 20 ஆம் தேதி நடைபெறும்' என்று குறிப்பிட்டார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து ஆளும் பாரதிய ஜனதாவும், எதிர்க்கட்சியான காங்கிரசும் ஜனாதிபதி வேட்பாளர்களை மிக விரைவில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.