கமல், ரஜினியை கடுமையாக தாக்கி பேசிய பிரேமலதா விஜயகாந்த்

  • IndiaGlitz, [Thursday,January 04 2018]

தமிழக அரசியல் களத்தில் புதியவர்கள் யார் வந்தாலும் எதிர்கொள்ள வேண்டிய அனைத்து எதிர்ப்புகளையும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரும் எதிர்கொண்டு வருகின்றனர். இதில் நடிகர்களாக இருந்து அரசியல் கட்சியலில் இருப்பவர்களின் எதிர்ப்புகளையும் கமல், ரஜினி ஆகிய இருவரும் எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

அந்த வகையில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவரையும் இன்று நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் அவர்களின் மனைவி பிரேமலதா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்

தற்போது அரசியலுக்கு யாரெல்லாமோ வருகிறார்கள் என்றும் திடீரென கட்சி ஆரம்பிக்கப்போவதாக சிலர் கூறுகிறார்கள் என்றும் ரஜினியை மறைமுகமாக கூறிய பிரேமலதா, யார் வேண்டுமானாலும் வாருங்கள் எங்களுக்கு பிரச்சினை இல்லை என்றும் அவர்களை, ரசிகர் மன்றமாக இருந்தபோதே ஓட ஓட விரட்டியவர்கள் விஜயகாந்த் ரசிகர்கள் என்றும் பிரேமலதா கூறினார்.

மைக்கை பார்த்ததால் பயமாக இருக்கிறது என்பவர்களும், கொள்கை என்னவென்று கேட்டால் தலையை சுற்றுகிறது என்பவர்களும் எதற்கு கட்சி ஆரம்பிக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பிய பிரேமலதா, இவரெல்லாம் நிம்மதியாக வீட்டில் படுத்து தூங்க வேண்டியதானே, எதற்கு அரசியலுக்கு வருகின்றனர் என்றும் கூறினார்

மேலும் வீட்டினுள் ஒரு அறையில் உட்கார்ந்து கொண்டு டுவிட்டரில் எல்லாம் இங்கு அரசியல் செய்ய முடியாது என்றும், மக்கள் பிரச்சனைக்காக களத்தில் இறங்கி போராட வேண்டும் என்றும் கமல்ஹாசனையும் அவர் மறைமுகமாக பிரேமலதா தாக்கி பேசினார்.