ரஜினி கூறியது போல் மாற்றம் நிச்சயம் நடக்கும்: பிரேமலதா விஜயகாந்த்
- IndiaGlitz, [Friday,March 13 2020]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது தனது அரசியல் கண்ணோட்டம் குறித்து சில கருத்துகளை தெரிவித்தார். குறிப்பாக ஆட்சிக்கு ஒரு தலைமை கட்சிக்கு ஒரு தலைமை என்றும் தான் கட்சிக்கு மட்டும் தலைமை பொறுப்பில் இருந்து வழிகாட்டியாக இருக்கப் போவதாகவும் முதலமைச்சர் பதவிக்கு வேறு ஒருவரை தேர்ந்தெடுக்க போவதாகவும் கூறினார். ரஜினியின் இந்த கருத்தை அவரது ரசிகர்கள் ஏற்றுக் கொள்வது போல் தெரியவில்லை. இருப்பினும் ரஜினியின் இந்த முடிவு கடைசி வரை தொடர்ந்து இருக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்த நிலையில் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்தும் அவர் நேற்று தெரிவித்த கருத்துக்கள் குறித்தும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் திரையுலக பிரமுகர்கள் அரசியல் விமர்சகர்கள் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். அந்த வகையில் தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது ரஜினியின் நேற்றைய பேச்சு குறித்து கூறியதாவது:
‘ரஜினிகாந்த் ஒரு நல்ல மனிதர். விஜயகாந்திற்கும், எங்களது குடும்பத்திற்கு அவர் மேல் ஒரு மரியாதை உண்டு. ரஜினிகாந்த் தன் அரசியல் நிலையை தெளிவாக கூறிவிட்டார். கருணாநிதியும் இல்லை, ஜெயலலிதாவும் இல்லை. அதனால் தமிழகத்தில் ஒரு வெற்றிடம் உள்ளது என்று ரஜினி கூறுகிறார். வருகிற தேர்தலில் இதற்கெல்லாம் ஒரு நல்ல முடிவு வரும். நிச்சயம் மாபெரும் ஒரு மாற்றம் தமிழக அரசியலில் நிகழப்போவது உறுதி என்பது எங்களது கருத்தும் கூட’ என்று கூறினார்.