ஏஐ தொழில்நுட்பம் மூலம் விஜயகாந்த்.. பிரேமலதா அதிரடி அறிவிப்பால் திரையுலகம் அதிர்ச்சி..!

  • IndiaGlitz, [Friday,July 05 2024]

ஏஐ தொழில்நுட்பம் மூலம் விஜயகாந்தை பயன்படுத்த இதுவரை யாருக்கும் அனுமதி வழங்கவில்லை என்றும் விஜயகாந்தை பயன்படுத்துவதாக திரையுலகினர் இசை வெளியீட்டு விழா உள்ளிட்டவற்றில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்றும் பிரேமலதா அறிக்கை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் வெளியான ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜயகாந்தை இந்த படத்தில் பயன்படுத்தி உள்ளோம் என்றும் அவரை எப்படி பயன்படுத்தி உள்ளோம் என்பது சஸ்பென்ஸ் என்றும் இயக்குனர் விஜய் மில்டன் கூறியிருந்தார்.

இந்த நிலையில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ் திரை உலகை சேர்ந்த அனைவருக்கும் அன்பான வேண்டுகோள், விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பத்தின் (AI TECHNOLOGY) மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வருகிறது. எனவே இதுபோன்ற செய்திகள் ஆடியோ வெளியீட்டு விழாவில் வருகின்றது. எங்களிடம் முன் அனுமதியில்லாமல் இது மாதிரியான அறிவிப்புகள் வருவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். எந்த விதத்தில் பயன்படுத்துவதாக இருந்தாலும் முறையாக அனுமதி பெற்ற பின்பே, அறிவிப்பை வெளியிட வேண்டும்.

ஏஐ தொழில்நுட்பத்தின் (AI TECHNOLOGY) மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக இதுவரை யாரும் எந்த அனுமதியும் பெறவில்லை என்பதை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம். எனவே அனுமதி இல்லாமல் பத்திரிகை செய்திகள், ஊடக செய்திகள், ஆடியோ வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

விஜய் நடித்த ’கோட்’ திரைப்படத்தில் பிரேமலதாவின் அனுமதி பெற்று அவரது ஏஐ காட்சிகள் இடம்பெறுவதாக செய்திகள் வெளியான நிலையில் அந்த படத்திற்கு எந்த சிக்கலும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.