சுபஸ்ரீ உயிரிழந்தது விதி: பிரேமலதா விஜயகாந்த் சர்ச்சை பேச்சு!
- IndiaGlitz, [Monday,September 23 2019]
சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் பேனர் கலாச்சாரத்தால் விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்த நிலையில் இந்த மரணத்திற்கு பேனர் வைத்ததே காரணம் என்றும், பேனர் கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன.
இந்த நிலையில் பேனர் விழுந்து இளம் பெண் சுபஸ்ரீ உயிர் இழந்தது விதி என்றும் எதிர்பாராமல் நடந்த விபத்தை எதிர்க்கட்சிகள் பெரிதுபடுத்துவதாகவும் தேதிமுக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
சென்னை அருகே விஜயகாந்த் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரேமலதா விஜயகாந்த் பேசியபோது, 'பேனர் தடையை முதலில் ஏற்றுக்கொண்ட கட்சி தேமுதிக என்றும், பேனர் கட்டுவதால் உயிர் போகிறது என்றால் பேனர் வேண்டாம் என்றும் கூறினார். மேலும் சுபஸ்ரீ உயிர் இழப்பு எதிர்பாராத நிகழ்வு என்றும், சுபஸ்ரீ மீது பேனர் விழுந்ததும், லாரி பின்னால் வந்ததும் விதி என்றும், அதிமுக பேனர் என்பதால் எதிர்க்கட்சி தலைவர் இதனை பெரிதுபடுத்தியுள்ளார்கள்' என்றும் தெரிவித்தார்.
நேற்று விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன், சுபஸ்ரீ பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறியதோடு, என்னை உங்கள் மகன் போல் நினைத்து எப்போது எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் என்று கூறிய நிலையில் இன்று பிரேமலதா இவ்வாறு பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.