தமிழ்நாடே கடனில் தான் உள்ளது: ஏலம் குறித்து பிரேமலதா விளக்கம்
- IndiaGlitz, [Friday,June 21 2019]
ரூ.5 கோடி வங்கியில் கடன் வாங்கி திரும்ப கட்டாததால் விஜயகாந்தின் ஒருசில சொத்துக்கள் ஏலம் விடப்படவுள்ளதாக வங்கி ஒன்று இன்றைய நாளிதழில் விளம்பரம் கொடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பிரேமலதா விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது: கேப்டன் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக நடிக்கவில்லை. எங்களுக்கு வருமானம் தந்து கொண்டிருந்த கல்யாண மண்டபமும் இடிக்கப்பட்டுவிட்டது. ஆண்டாள் அழகர் கல்லூரியை நாங்கள் சேவை மனப்பான்மையுடன் தான் நடத்தி வந்தோம். இதனால் எங்களுக்கு சுத்தமாக வருமானம் இல்லாததால் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் போய்விட்டது. இருப்பினும் இன்னும் இரண்டு மாதங்கள் கால அவகாசம் உள்ளது. அதற்குள் எப்பாடுபட்டாவது கடனை அடைத்துவிடுவோம்.
கடன் யாருக்குத்தான் இல்லை? தமிழ்நாடே கடன் வாங்கியுள்ளது, ஏன் இந்தியாவே கடனில்தான் உள்ளது? பெரிய பெரிய நிறுவங்களும் கடன் வாங்கித்தான் தொழிலை நடத்தி வருகின்றனர். அதுபோல்தான் நாங்களும் கடன் வாங்கினோம். ஓரளவுக்கு வட்டியையும் அசலையும் கட்டிக்கொண்டுதான் வந்தோம். ஆனாலும் வங்கி நிர்வாகம் சட்டப்படி எடுக்க வேண்டிய நடவடிக்கையை எடுத்துள்ளது. நாங்களும் சட்டப்படி இதனை அணுகி இந்த சிக்கலில் இருந்து மீண்டு வருவோம் என்று பிரேமலதா கூறினார்.