ஆய்வாளர் எட்டி உதைத்ததால் கர்ப்பிணி பெண் மரணம். திருச்சியில் பரபரப்பு
- IndiaGlitz, [Thursday,March 08 2018]
திருச்சி அருகே உள்ள திருவெறும்பூரில் நேற்றிரவு காவல்துறை ஆய்வாளர் காமராஜ் என்பவர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு தம்பதியினர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அவர்களை வண்டியை நிறுத்தும்படி ஆய்வாளர் சைகை காண்பித்தார். ஆனால் அதனை கவனிக்காமல் அந்த தம்பதியினர் நிறுத்தாமல் சென்றதாக தெரிகிறது
இந்த நிலையில் அவர்களை விரட்டி சென்ற ஆய்வாளர் காமராஜ், அவர்கள் சென்ற பைக்கை எட்டி உதைத்தார். இதனால் நிலைகுலைந்து போன இருவரும் சாலையில் விழுந்தனர். அந்த நேரத்தில் பின்னால் வந்த வேன் மோதியதால் பைக்கில் பின்னால் உட்கார்ந்திருந்த பெண் பரிதாபமாக பலியானார். விசாரணையில் அவரது பெயர் உஷா என்றும், அவர் மூன்று மாத கர்ப்பிணி என்றும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் கர்ப்பிணி பெண் மரணத்திற்கு காரணமான காமராஜ் கைது செய்யப்பட்டு அவர் மீது கொலை முயற்சி உள்பட இரண்டு பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது. பின்னர் அவர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை வரும் 21ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து காமராஜ் சிறையில் அடைக்கப்பட்டார்.