கர்ப்பமான பள்ளி சிறுமி… தட்டிக் கழிக்காமல் அக்கறையோடு செயல்பட்ட அரசு மருத்துவர்!

  • IndiaGlitz, [Friday,December 24 2021]

சிவகங்கையில் அரசு மருத்துவராக பணியாற்றிவரும் ஃபரூக் அப்துல்லா என்பவர், 14 வயது சிறுமி ஒருவரின் எதிர்காலத்தைப் பல்வேறு நெருக்கடிக்களுக்கு மத்தியில் காப்பாற்றி கொடுத்துள்ளார். மேலும் இந்த மருத்துவரின் மெனக்கெடலைப் பார்த்து பலரும் வியந்து பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

சிவகங்கை அரசு மருத்துவமனையில் பொதுநோயாளிகள் பிரிவில் பணியாற்றிவந்த ஃபரூக் அப்துல்லாவிடம் சிகிச்சைக்காக 14 வயது பள்ளி சிறுமி ஒருவர் தனது தோழியுடன் வருகை தந்துள்ளார். தனக்கு கடந்த 2 மாதங்களாக மாதவிடாய் வரவில்லை என்று கூறிய அந்தச் சிறுமியை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர் ஃபரூக் ஒருவேளை சிறுமி கர்ப்பம் அடைந்து இருப்பாளோ? என்ற சந்தேகம் அடைந்துள்ளார்.

ஆனால் வெளிப்படையாக பேசுவது நாகரிகமல்ல என்று கருதிய அவர், மூத்த மருத்துவரிடம் அனுமதி கேட்டு சிறுமிக்கு தெரியாமலேயே அவரது சிறுநீரை வைத்து ஃப்ரகனன்சி கார்டு வைத்து டெஸ்ட் செய்துள்ளார். இரண்டுமுறை பரிசோதித்த போதும் சிறுமி கர்ப்பம் என்று முடிவு வந்தது. இதையடுத்து சிறுமியை கூப்பிட்டு விசாரிக்கலாமா? என்று நினைத்த ஃப்ருக் ஒருவேளை இதுவே அவளது உயிருக்கு ஆபத்தாக முடிந்துவிடுமோ என எண்ணி மிக எச்சரிக்கையாடு அம்மாவை கூட்டிக்கொண்டு வருமாறு சொல்லி சிறுமியை அனுப்பி வைத்துவிட்டார்.

இதையடுத்து சிறுமி கொடுத்த அலைபேசி எண், அஞ்சல் முகவரி ஆகியவற்றை வைத்து அந்தப் பெண்ணின் பெற்றோரை தொடர்பு கொள்ள முயற்சித்து இருக்கிறார். அப்போதுதான் தெரிந்தது, அந்தச் சிறுமி கொடுத்த விவரங்கள் போலி என்பது. உடனே கிராமங்களில் பணியாற்றும் ஆரம்பச் சுகாதார செவிலியர்களை அழைத்து அப்பெண்ணின் பெயர், அடையாளங்களை சொல்லி விசாரித்து இருக்கிறார். ஆனால் அந்த சிறுமி பெயரையும் மறைத்துவிட்டதால் மருத்துவரின் இந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது.

இதனால் கிட்டத்தட்ட மனஉளைச்சலுக்கு ஆளாகியிருந்த மருத்துவர் ஃபருக் ஒருவழியாக ஒரு பெரியவரைப் பார்த்து பெருமூச்சு விட்டிருக்கிறார். காரணம் சிறுமி மருத்துவமனைக்கு வந்தபோது அந்த பெரியவர் “எங்க ஊரு பொண்ணுதாங்க…“ எனக்கூறியது அவருக்கு நினைவுக்கு வந்ததையடுத்து மருத்துவ ஊழியரை வைத்து ஒருவழியாக சிறுமியின் ஊரைக் கண்டுபிடித்துள்ளார்.

ஆனாலும் சிறுமி பற்றிய முழுவிவரம் எதுவும் தெரியாத காரணத்தால் அந்த ஊரில் உள்ள அரசு பள்ளியில் ஒரு மருத்துவ கேம் வைத்து ஒருவழியாக சிறுமியின் ஆசிரியர் மூலமாக சிறுமியின் முகவரி, பெற்றோர் பற்றிய விவரங்களைக் கண்டுபிடித்து அவரது பெற்றோருக்கு இந்த விஷயத்தை தெரியப்படுத்தியுள்ளார்.

இதையடுத்து சிறுமியின் தயார், யார் இந்த கொடுமையை செய்தது என விசாரித்துள்ளார். திருமணமாகி 2 குழந்தைக்கு தந்தையான தனது சொந்த சகோதரன் சிறுமியை பயன்படுத்தி வந்தது கண்டுபிடிப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும் சிறுமியின் உயிர் மற்றும் எதிர்காலத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் அரசு மருத்துவமனையில் அவரது கர்ப்பம் கலைக்கப்பட்டு தற்போது நிம்மதி அடைந்திருக்கும் சம்பவம் நடைபெற்றிருக்கிறது. இந்தச் சம்பவத்தில் மருத்துவர் ஃபரூக் மிகவும் பொறுப்புடன் நடந்துகொண்டுள்ளார்.

மேலும் இந்தச் சம்பவம் குறித்து மருத்துவர் ஃப்ரூக் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்டதையடுத்து, சமூகத்தில் சிறுமியின் பெயருக்கு களங்கம் ஏற்படாத வகையிலும் அதோடு உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையிலும் மருத்துவர் ஃப்ரூக் நடந்து கொண்டதைப் பார்த்து பலரும் வியப்பை வெளியிட்டு வருகின்றனர்.