10 மாதத்தில் 3 முறை கொரோனாவில் இருந்து மீண்ட கர்ப்பிணிப் பெண்… நம்பிக்கை கதை!
- IndiaGlitz, [Saturday,May 22 2021]
கொரோனா நோய்த்தொற்று பரவலால் பல லட்சக்கணக்கான மக்கள் தங்களை அறியாமலே மன அழுத்ததிற்கு ஆளாகி உள்ளனர். அதிலும் குழந்தைகளின் நிலைமை படு மோசமாக இருக்கிறது. அதோடு கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கும் நோயாளிகள் பலர் அதீத மரணப் பயத்துடன் காட்சி அளிப்பதையும் பார்க்க முடிகிறது.
இப்படி இருக்கும் சூழலில் மும்பையைச் சேர்ந்த ஒரு கர்ப்பிணிப் பெண் 10 மாதங்களில் 3 முறை கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து உத்வேகத்துடன் மீண்டு வந்து இருக்கிறார். மேலும் ஒரு அழகான பெண் குழந்தையை ஆரோக்கியத்தோடு பெற்றெடுத்து இருக்கிறார்.
மும்பையைச் சேர்ந்த இளம்பெண் சாரா ஷாம் (32). இவர் கடந்த ஆண்டு ஜுலை மாதம் தனக்கு குழந்தை பிறப்பதற்கு 3 நாளைக்கு முன்பாக பாதுகாப்பு கருதி கொரோனா பரிசோதனை மேற்கொண்டு உள்ளார். அந்தப் பரிசோதனையில் கொரோனா பாசிடிவ் வந்து இருக்கிறது. இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு ஒரு அழகான பெண் குழந்தையையும் பெற்று எடுத்துள்ளார். பின்பு நெகடிவ் ரிசல்ட் வந்த நிலையில் தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கத் தொடங்கி இருக்கிறார்.
இந்நிலையில் 3 மாதங்களுக்கு பின்பு சாராவிற்கு மீண்டும் உடல்வலி, சோர்வு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்து இருக்கிறார். பாசிடிவ் என ரிசல்ட் வந்து இருக்கிறது. இதைப் பார்த்த மருத்துவர்களே திகைத்து போய் இருக்கின்றனர். காரணம் கடந்த ஆண்டு ஜுலை மாதத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் நோய்த்தொற்று வருமா என்பதே சந்தேகமாக இருந்தது.
இதற்கு விடை தெரிவதற்குள் 3 ஆவது முறையும் சாராவிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் தொடர்ந்து சிகிச்சை, மருத்துவமனை என இருந்த சாரா தனது குழந்தையை விட்டு பிரிந்து கடும் மன அழுத்ததிற்கு ஆளானார். மேலும் தொடர்ந்து 3 முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் உடல் நிலையும் மோசமடைந்துள்ளது. ஆனாலும் கொரோனாவில் இருந்து மீள வேண்டும் என்ற உத்வேகம் அவருக்கு இருந்தது.
அதோடு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த தேவையான உணவு, சுவாசப் பயிற்சி மேலும் மன வலிமையால் தற்போது சாரா கொரோனாவில் இருந்து மீண்டு வந்து இருக்கிறார். கொரோனா நோய்த்தொற்றால் இந்தியா முழுக்க பீதி ஏற்பட்டு இருக்கும் இந்தச் சூழலில் சாராவின் கதை பலருக்கும் நம்பிக்கை அளிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.