கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடக்கூடாதா??? என்ன காரணம்?
- IndiaGlitz, [Friday,January 15 2021]
அவசர கால அடிப்படையில் இந்தியா முழுவதும் நாளை முதல் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருகிறது. இந்நிலையில் கர்ப்பிணிகளுக்கும் இளம் குழந்தைகளைக் கொண்ட தாய்மார்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடக்கூடாது என அரசாங்கம் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கிறது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், “குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் பெண்கள் தடுப்பூசிகளைப் பெற வேண்டாம். ஏனெனில் அவர்கள் மீது எந்த கொரோனா வைரஸ் தடுப்பூசியையும் மருத்துவப் பரிசோதனை செய்யவில்லை” எனக் கூறியுள்ளது.
மேலும் கடிதம் மூலம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் இந்தத் தகவல் அனுப்பப்பட்டு உள்ளது. சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் மனோகர் அக்னானி அனுப்பிய இந்தக் கடிதத்தில் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் பெண்கள் இதுவரை எந்தவொரு தடுப்பூசி மருத்துவ பரிசோதனையிலும் ஒரு பகுதியாக இடம்பெற வில்லை. எனவே கர்ப்பமாக இருக்கும் அல்லது கர்ப்பமாக இருப்பதில் உறுதியாக இருக்கும் பெண்கள் இந்த முறை கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.