சென்னையில் பிரசாந்த் நடித்த 'சாஹசம்' இசை வெளியீட்டு விழா

  • IndiaGlitz, [Friday,September 18 2015]

நீண்ட இடைவெளிக்கு பின்னர் பிரசாந்த் ரீ-எண்ட்ரி ஆகும் திரைப்படம் 'சாஹசம்'. இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு மலேசியா மற்றும் ஜப்பான் நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தனியார் எப்.எம் வானொலி நிலையம் ஒன்றில் நடந்தது. இந்த படத்தின் இசையமைப்பாளர் தமன் ஆறு பாடல்களை கம்போஸ் செய்துள்ளார். பாடல்கள் அனைத்தும் தயாரிப்பாளர் தியாகராஜனை வெகுவாக கவர்ந்ததால், இசையமைப்பாளருக்கு விலையுயர்ந்த டயோட்டா பார்சூனர் காரை அவர் பரிசளித்துள்ளார்.

இந்த படத்தின் பாடல்களை சிம்பு, அனிருத், லட்சுமி மேனன் ஆகிய திரை நட்சத்திரங்களும், இந்தியாவின் தலைசிறந்த பாடகர்களான மோஹித் சவுஹான், ஸ்ரேயா கோஷல், ஷங்கர் மகாதேவன் மற்றும் விஜய் பிரகாஷ் ஆகியோர்களும் பாடியுள்ளனர்.

இந்த படத்தில் இடம்பெற்ற 'சாயாங்கு' என்ற பாடல் மலேசியாவில் இதுவரை யாரும் படப்பிடிப்பு நடத்திராத விசேஷமான இடங்களில் தொடர்ந்து 10 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது. சாயாங்கு என்றால் “அன்பே ஆருயிரே” என்று அர்த்தமாம். சமீபத்தில் இந்த பாடலை மலேசியாவில் பிரசாந்த் சிங்கிள் டிராக்காக வெளியிட்டார்.

பிரசாந்த், அமண்டா, நாசர், தம்பி ராமைய்யா, சோனு சூது, எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், ரோபோ சங்கர், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் அருண்ராஜ்வர்மா இயக்கியுள்ளார். இந்த படத்தை பெரும் பொருட்செலவில் தியாகராஜன் தயாரித்துள்ளார்.