பிரசாந்த் பூஷனுக்கு விதிக்கப்பட்ட ஒரு ரூபாய் அபராதத்தை கொடுத்தவர் யார் தெரியுமா?

பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் அவர்கள் சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் செயல்பாடுகள் குறித்து தனது டுவிட்டரில் விமர்சனம் செய்ததை அடுத்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் இன்று அவருக்கான தண்டனை குறித்தும் சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பில் அறிவித்துள்ளது.

பிரசாந்த் பூஷன் ஒரு ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் இந்த அபராதத் தொகையை அவர் செலுத்தாவிட்டால் மூன்று மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு நீதிமன்றத்தில் வாதாட தடை விதிக்கப்படும் என்றும் சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் பிரசாந்த் பூஷன் தனக்கு அளிக்கப்பட்ட அபராத தொகையான ஒரு ரூபாயை தனது சீனியர் வழக்கறிஞர் ராஜிவ் தவான் அவர்கள் அளித்ததாக தனது டுவிட்டரில் புகைப்படத்துடன் கூடிய ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் ’சுப்ரீம் கோர்ட்டை அவமதிக்க வேண்டும் என்பது தனது நோக்கமல்ல என்றும், நீதிமன்ற அவமதிப்பு தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன் என்றும் ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்விடம் சுப்ரீம் கோர்ட் தான் என்றும், சுப்ரீம் கோர்ட்டிற்கு எதிரான வேதனையை வெளிக்காட்டவே நான் அப்படி பேசினேன்’ என்றும் தெரிவித்துள்ளார்.