சிரியா படுகொலையை உச்சு கொட்டுவதால் என்ன பயன்? நடிகர் பிரசன்னாவின் ஆவேச பதிவு
- IndiaGlitz, [Monday,February 26 2018]
சிரியாவில் கடந்த ஒரு வாரத்தில் நடந்த தாக்குதலில் மட்டும் சுமார் 500 பேர் கொல்லப்பட்டதாகவும், அவர்களில் பெரும்பாலும் குழந்தைகள் என்றும் ஊடகங்களில் தலைப்பு செய்தியாக வந்து கொண்டிருக்கின்றது. எங்கோ ஒரு நாட்டில் நடந்த கொலையை தலைப்பு செய்தியாக வெளிவந்ததை படிக்கும் நாம், நம் ஊரின் அருகிலேயே நடைபெறும் கொடூரமான கொலைகளை கண்டுகொள்ளாமல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இதுகுறித்து நடிகர் பிரசன்னா தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'விழுப்புரத்தில் ஆராயி மற்றும் அவரின் 8 வயது மகன் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் ஒரு பிரபலத்தின் மரணத்தால் மட்டுமே அதிகம் பேசப்படாமல் இருக்கிறதா அல்லது வேறு காரணமா? கேரளாவில் மதுவை கொன்ற கும்பலை கைது செய்தது போல் இங்கும் நடவடிக்கை எடுக்கப்படுமா? மதுக்களும் ஆராயிகளும் பிள்ளைக்கொலைகளும் வன்புணர்வுகளும் நாளும் நடந்தேறும் நம் முற்றத்தை சீர்செய்யாத நாம், சிரியாவின் படுகொலைகளை உச்சுக்கொட்டி என்ன பயன்? மனிதம் மரித்ததெப்போது? என்று பதிவு செய்துள்ளார்.
பிரசன்னாவின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதோடு அவருக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. சினிமா பிரபலங்கள் கட்சி ஆரம்பித்து முதல்வர் பதவியை நோக்கி செல்வது மட்டுமின்றி இதுபோன்ற சாதி, ஆணவ படுகொலைகளுக்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டும் என்பதும் பிரபலமானவர்கள் இவ்வாறு குரல் கொடுப்பதால் அந்த செய்தி முக்கியத்துவம் பெற்று அதற்கோர் விடிவுகாலம் ஏற்பட ஒரு வாய்ப்பு உண்டு என்பதும் அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
— Prasanna (@Prasanna_actor) February 26, 2018