நடிகை பிரணிதாவிற்கு ஐக்கிய அரபு அமீரகம் கொடுத்த கவுரவம்!
- IndiaGlitz, [Thursday,February 24 2022]
தமிழ் மற்றும் கன்னட மொழி சினிமாவில் வரவேற்பு பெற்ற நடிகையாக இருந்துவரும் பிரணிதா சுபாஷுவிற்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசாவை வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
ஐக்கிய அரபு அமீரகம் கடந்த 2019 முதல் திரைத்துறை, தொழில்துறை, சமூகம் சார்ந்த விஷயங்களில் முனைப்போடு செயலாற்றி வரும் பிரபலங்களுக்கு கோல்டன் விசாவை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த விசாவை பெறும் நபர்கள் 10 ஆண்டுகளுக்கு அந்நாட்டில் குடியுரிமை பெற்றவர்களாகவே மதிக்கப்படுவர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் இதற்கு முன்பு நடிகர் பார்த்திபன், சிம்பு, நடிகை த்ரிஷா, லட்சுமி ராய் போன்றோருக்கு வழங்கப்பட்டது.
அதேபோல மலையாளத்தில் பிருத்திவிராஜ், துல்கர் சல்மான், மம்முட்டி, மோகன்லால், அமலாபால், மீரா ஜாஸ்மீன் போன்ற பிரபலங்களுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கன்னடம் மற்றும் தமிழ் மொழி சினிமாக்களில் முன்னணி நடிகையாக இருந்துவரும் பிரணிதா சுபாஷ் தற்போது கோல்டன் விசாவை பெற்றுக்கொண்டதாகத் தகவல் தெரிவித்துள்ளார்.
கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை பிரணிதா தமிழில் “உதயன்“ எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து நடிகர் கார்த்தியுடன் இணைந்து “சகுனி“, நடிகர் சூர்யாவுடன் இணைந்து “மாஸ் என்ற மாசிலாமணி“ மேலும் “எனக்கு வாய்த்த அடிமைகள்“, “ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்“ போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார்.
சமீபத்தில் பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்துகொண்டு தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்திவரும் இவருக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசாவை வழங்கி கவுரவித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.