'7ஆம் அறிவு' போதிதர்மருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மரியாதை
- IndiaGlitz, [Saturday,May 28 2016]
தமிழகத்தை சேர்ந்த போதிதர்மர் சீனாவில் புகழ்பெற்று விளங்கியதோடு அங்கு புத்தருக்காக ஒரு கோவிலையும் கட்டினார் என்பது வரலாறு. ஆனால் இவர் யார் என்பதை நாம் பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய '7ஆம் அறிவு' படத்தில் இருந்துதான் தெரிந்து கொண்டோம். இந்நிலையில் சமீபத்தில் சீனா சென்ற இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, போதி தர்மர் கட்டிய புத்தர் கோவிலில் வழிபாடு செய்துள்ளார்.
கி.பி. 5-ம் நூற்றாண்டில் பல்லவ அரச குடும்பத்தில் பிறந்த போதி தர்மர் காஞ்சிபுரத்தில் புத்த துறவியாக மாறி அதன் பின்னர் சீனாவுக்கு சென்று அங்கு பரவி வந்த பெருநோய்களை குணமாக்கியதோடு அங்கு புத்த மதத்தையும் தழைத்தோங்கச் செய்தார். சீன நாட்டின் வரலாற்றின்படி இந்தியாவில் இருந்து சுமார் 3 ஆண்டுகள் பயணம் செய்து போதி தர்மர் சீனா சென்றடைந்துள்ளதாகவும் அங்கு குவாங்சூ நகரில் வாழ்ந்து புத்த மதத்தை நாடு முழுவதும் பரப்பியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி. 526ஆம்ஆண்டில் அந்நகரில் லியாங் வம்ச மன்னர்களின் உதவியுடன் ஹுவாலின் புத்தர் கோயிலை போதி தர்மர் நிறுவினார்.
அந்த கோயிலின் வாசலில் போதி தர்மருக்கு 75 அடி உயரத்தில் மிகப் பெரிய சிலை வைக்கப்பட்டு அதனருகில் உள்ள கல்வெட்டில் மேற்கில் இருந்து வந்த துறவி' என்று பொறிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் சமீபத்தில் சீனாவுக்கு அரசுமுறை சுற்றுப்பயணமாக நான்கு நாட்கள் சென்ற இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி குவாங்சூ நகரில் உள்ள ஹுவாலின் புத்தர் கோயிலுக்கு புதன்கிழமை சென்றார். கோயிலின் நுழைவுவாயிலில் உள்ள போதி தர்மர் சிலைக்கு மரியாதை செலுத்தி வழிபட்டார். அந்த கோயிலின் புத்த மதத் துறவிகள், தமிழக துறவி போதி தர்மரின் பெருமைகள் குறித்து பிரணாபிடம் எடுத்துரைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.