தமிழ் மாணவர்கள் தட்டிப்பறிப்பது உண்மைதான்: நடிகர் பிரகாஷ்ராஜ் சர்ச்சை கருத்து
- IndiaGlitz, [Sunday,May 05 2019]
தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று சமீபத்தில் நெட்டிசன்கள் கொந்தளித்து எழுந்தது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள ஒரு ஆடியோவில், 'டெல்லி பல்கலையில் தமிழ் மாணவர்கள் அதிக இடம் பிடித்துவிடுவதால் டெல்லி மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும், இதனை மாற்றி டெல்லி மாணவர்களுக்கு அதிக இடம் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றும் கூறினார். முதல்வரின் இந்த பேச்சுக்கு டெல்லி தமிழ் மாணவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்காக டெல்லியில் பிரச்சாரம் செய்து வரும் நடிகர் பிரகாஷ்ராஜ், 'டெல்லி பல்கலைக்கழகத்தில் டெல்லி மாணவர்களின் வாய்ப்பை தமிழ் மாணவர்கள் தட்டிப்பறிப்பது உண்மைதான் என்றும், தான் தமிழர் இல்லை என்றும் கன்னடன் என்றும் பேசியுள்ளார். அவருடைய இந்த பேச்சு அவரது நடிப்பை ரசிக்கும் தமிழ் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரகாஷ்ராஜ் ஒரு கன்னடராக இருக்கலாம், கன்னடம் உள்பட பல மொழிகளில் அவர் நடித்திருக்கலாம். ஆனால் தமிழ்ப்படங்களில் நடித்ததால் அவர் தென்னிந்திய அளவில் பிரபலமானார். அவர் தனது சொந்தப்படங்களையும் பெரும்பாலும் தமிழில்தான் தயாரித்தார். தமிழ்ப்படங்களில் நடித்ததால் அவர் கோடிகோடியாக சம்பாதிக்க முடிந்தது. அதனையெல்லாம் மறந்துவிட்டு தற்போது அவர் தமிழர்களுக்கு எதிராக பேசியுள்ளது வேதனையாக இருப்பதாக நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.
இதுகுறித்து டெல்லி தமிழ் மாணவர் சங்கத்தலைவர் சரவண ராகுல் கூறியபோது, 'பிரகாஷ்ராஜ் தமிழ் மாணவர்களுக்கு ஆதரவாக பேசாமல் இருந்தால் கூட பரவாயில்லை, கல்வி கற்கும் மாணவர்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் வகையில் பேசியதை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார். மேலும் பிரகாஷ்ராஜின் இந்த கருத்துக்கு பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.