தயவுசெய்து யாரும் இதை நம்பிவிட வேண்டாம்: பிரகாஷ்ராஜ் வேண்டுகோள்
- IndiaGlitz, [Monday,January 29 2018]
பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த சில நாட்களாக மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் எதிரான கருத்துக்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஆவேசமாக கூறி வருகின்றார். இருப்பினும் அவரது கருத்து நாகரீகமாக தவறை சுட்டிக்காட்டும் விதத்தில் இருப்பதால் பொதுமக்களின் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தான், பங்களாதேஷ், காஷ்மீர் பகுதியில் வாழும் இந்துக்கள் குறித்து பிரகாஷ்ராஜ் சர்ச்சைக்குரிய ஒரு கருத்து கூறியதாக சமூக வலைத்தளங்களில் ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வருகிறது. இந்த வதந்தியை உண்மை என நினைத்து பலர் பிரகாஷ்ராஜை விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த கருத்து தன்னுடைய கருத்து அல்ல என்றும், தன்னுடைய பெயரில் வெளிவந்துள்ள போலியான வதந்தி என்றும் பிரகாஷ்ராஜ் குறிப்பிட்டுள்ளார். இதுமாதிரியான பொய்யான கருத்துக்களை பரப்புவதன் மூலம் நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை இந்த உலகத்திற்கு விளக்கியுள்ளீர்கள் என்பதும் நீங்கள் எந்த அளவுக்கு விரக்தி அடைந்திருக்கின்றீர்கள் என்பதும் புரிகிறது என்றும் கூறிய பிரகாஷ்ராஜ், தயவுசெய்து கோழைகள் பரப்பியுள்ள இந்த வதந்தியை உண்மை என குடிமக்கள் யாரும் நம்பிவிட வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் ஒரு பயமற்ற சமுதாயத்தை உருவாக்க பாடுபடுவோம்' என்று பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்