உருளைக் கிழங்கில் புற்றுநோயை ஏற்படுத்தும் ரசாயனம்… கதிகலங்க வைக்கும் தகவல்!!!
- IndiaGlitz, [Wednesday,December 16 2020]
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உருளைக் கிழங்கை மெருகேற்றுவதற்காக புற்றுநோயை ஏற்படுத்தும் ரசாயனம் தூவப்பட்ட சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தூர் மாநிலத்தைச் சேர்ந்த சுக்லா குமாவத் தனக்கு சொந்தமான உருளைக்கிழக்கு பேக்டரியில் சிப்ஸ் மற்றும் சேவு போன்ற உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இந்தப் பொருட்களை உற்பத்திச் செய்யும்போது அவர் சோடியம் ஹைட்ராக்சைட் போன்ற ரசாயனங்களைப் பயன்படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தூர் அடுத்த சன்வாரியா பகுதியில் இருக்கும் ஒரு உணவு உற்பத்தித் தொழிற்சாலையை நேற்று அதிகாரிகள் சோதனை இட்டுள்ளனர். முதலில் இழுத்து மூடப்பட்ட தொழிற்சாலைக்குள் செல்ல முடியாமல் தவித்த அதிகாரிகள் அந்த நிறுவனத்தின் சுவற்றில் ஏறிக் குதித்து பின்னர் பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றதாகக் கூறப்படுகிறது. அப்படி உள்ளே சென்ற அதிகாரிகளுக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது.
சுருங்கி போன உருளைக் கிழங்குகளை குமாவத் மெருகேற்றி பின்னர் சிப்ஸ்களாக மாற்றி விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதற்காக அவர் 1000 கிலோ குவிண்டால் சோடியம் ஹைட்ராக்சைடு ஸ்டாக் வைத்து இருந்ததையும் அதிகாரிகள் கண்டுபிடித்து உள்ளனர். மேலும் 700 கிலோ அழுகிப்போன உருளைக் கிழங்குகளையும் உணவுத் தயாரிப்பதற்காக அந்த நிறுவனத்தில் வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
அழுகினது மற்றும் சுருங்கிய உருளைக் கிழங்குகளை சோடியம் ஹைட்ராக்சைடு கொண்டு மெருகேற்றி பின்னர் சிப்களாக தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார். இவர் பொறிப்பதற்கும் பாமாயிலைத்தான் பயன்படுத்தி வந்து இருக்கிறார். இதற்காக வைக்கப்பட்டு இருந்த 180 கிலோ பாமாயிலும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் சுக்லால் குமாவத் இதுபோன்று ஏற்கனவே உணவுப் பொருள் தயாரிக்கும் தொழிற்சாலையை வைத்து முறைகேட்டில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. அந்த வழக்கில் 95000 அபராதம் செலுத்தியதை மறைத்து இவர் மற்றொரு இடத்தில் உணவுத் தொழிற்சாலையை நிறுவி இயக்கி வந்ததும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.