பிரதீப் ரங்கநாதன் ஜோடியாகும் மமிதா பாஜூ.. இயக்குனர் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Tuesday,May 28 2024]

மலையாள திரையுலகின் பிரபல நடிகையான மமிதா பாஜு நடிப்பில் சமீபத்தில் வெளியான ’பிரேமலு’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவர் பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

’கோமாளி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகி அதன் பின்னர் ’லவ் டுடே’ என்ற படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன், தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் ’எல்ஐசி’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அது மட்டுமின்றி ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ’டிராகன்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பிரதிப் ரங்கநாதன் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் சுதா கொங்கரா உதவியாளர் கீர்த்தீஸ்வரன் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமிதா பாஜு நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

பிரதீப் ரங்கநாதன் ஒரு பக்கம் தமிழில் சூப்பர் ஹிட் படம் கொடுத்தவர் என்ற நிலையில் மமிதா பாஜு இன்னொரு பக்கம் மலையாளத்தில் சூப்பர் ஹிட் படம் கொடுத்துள்ள நிலையில் ஒரே படத்தில் இருவரும் இணைவதால் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.