ஏ.வி.எம் 70வது ஆண்டுவிழா. பிரபு வாழ்த்து
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவின் ஆணிவேர் என்று கூறப்படும் நிறுவனம் ஏவிஎம். சிவாஜிகணேசன் அறிமுகமான பராசக்தி மற்றும் பாயும் புலி, முரட்டுக்காளை, சகலகலாவல்லவன், முந்தானை முடிச்சு, தூங்காதே தம்பி தூங்காதே, நல்லவனுக்கு நல்லவன், சம்சாரம் அது மின்சாரம், எஜமான், சிவாஜி உள்பட பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த நிறுவனம் ஏவிஎம்.
கடந்த 1945ஆம் ஆண்டு ஏ.வி.மெய்யப்ப செட்டியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனத்தின் 70வது ஆண்டுவிழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. இந்த விழாவில் ஏவி.மெய்யப்பன் தமிழில் எழுதிய எனது வாழ்க்கை அனுபவங்கள்` என்ற புத்தகத்தின் ஆங்கில மொழியாக்க நூல் வெளியீட்டு விழாவும் நடந்தது. இந்த விழாவுக்கு இந்து என்.ராம் தலைமை தாங்கினார். இந்த நூலை பிரபல தொழிலதிபர் கிருஷ்ணராஜ் வானவராயர் வெளியிட, நடிகர் பிரபு பெற்றுக்கொண்டார்.
இந்த விழாவில் பேசிய இளையதிலகம் பிரபு, தான் சிறுவயதில் பலமுறை ஏவிஎம் ஸ்டுடியோவை ஆச்சரியத்துடன் பார்த்துள்ளதாகவும், ஏவிஎம் உருண்டை பந்து சுழல்வதை பார்த்துவிட்டு உள்ளே நுழையும்போதே சினிமா என்ற உலகத்திற்குள் நுழைந்ததுபோல் இருக்கும் என்றும் கூறினார். சிறுவயதில் ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு தனது தந்தை சிவாஜியுடன் சென்றபோது அங்கு ஒரே நேரத்தில் சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் ஆகியோர்களின் படங்களின் படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருப்பதை தான் பார்த்துள்ளதாக அவர் நினைவு கூர்ந்தார். மேலும் ஒரு மனிதன் இப்படித்தான் வாழவேண்டும் என்பதற்கு பெரிய உதாரணம் திரு.ஏவிஎம் சரவணன் என்றும், பெரியவர் சிறியவர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் ஒரே மரியாதை கொடுக்கும் உன்னதமான மனிதர் அவர் என்றும் பிரபு தனது உரையில் பாராட்டு தெரிவித்தார்.
இந்த விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், பழம்பெறும் திரைப்பட நிறுவனமான ஏவிஎம், நிறுவனர் எழுதிய இந்த புத்தகம், சினிமாவுக்கு புதிதாக வரும் இளைஞர்களுக்கு ஒரு நல்ல பாடம் என்றும், இந்த புத்தகத்தை வாங்கி படித்துவிட்டு சினிமாவுக்கு வாருங்கள் என்றும் அவர் அறிவுரை கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout