தேவி - திரை விமர்சனம்
Send us your feedback to audioarticles@vaarta.com
முழு திருப்தி தரும் ஹாரர்-காமெடி படம்
இயக்குனர் விஜய், பிரபுதேவா, தமன்னா ஆகியோர் இணைந்திருக்கும் தேவி`,. இன்று வெளியாகியிருக்கும் படங்களில் குறைவான எதிர்பார்ப்புடன் வந்திருந்தாலும் நிறைவைத் தரும் படமாக அமைந்திருக்கிறது.
மும்பையில் நல்ல வேலையில் இருக்கும் கிருஷ்ண குமார் (பிரபுதேவா) ஆங்கிலம் பேசத் தெரிந்த மாடர்ன் பெண்ணை கல்யாணம் செய்துகொள்ள விரும்புகிறான்.
ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக அப்பாவின் மீதான பயத்தாலும் தன் சொந்த கிராமத்தைச் சேர்ந்த படிக்காத பெண் தேவியை (தமன்னா) மணக்கிறான். இருவரும் மும்பையில் குடியேறுகிறார்கள்.
மனைவியை எப்படியாவது திருப்பி அனுப்ப முயற்சிக்கிறான் கிருஷ்ணா. அப்போது அவர்கள் தங்கியிருக்கும் வீட்டில் தற்கொலை செய்துகொண்ட பெண்ணீன் ஆவி தேவியின் உடலில் புகுந்துவிடுகிறது.
அதன் பின் நடப்பதைத் திரையில் தெரிந்துகொள்க.
தமிழ் சினிமாவில் மிக அதிகமாகிவிட்ட ஹாரர்-காமடி வகைப் படங்களில் ஹாரர், காமடி, எமோஷன் ஆகிய மூன்று அம்சங்களில் திருப்தி அளிப்பதோடு, இந்த வகையைச் சேர்ந்த படங்களிலிருந்து அனைத்து விதத்ங்களிலும் மாறுபட்டு புதுமையான அனுபவத்தைத் தரும் படமாக அமைந்துள்ளது `தேவி`.
தொடர்ந்து சில தோல்விப் படங்களைக் கொடுத்துக் கொண்டிருந்த இயக்குனர் விஜய்க்கு இந்தப் படம் முக்கியமான திருப்புமுனையைக் கொடுக்கும். திரையரங்கில் பல இடங்களில் காதைப் பிளக்கும் கைதட்டல்களை வைத்து இதைச் சொல்கிறோம்.
கதபாத்திரங்களும் அவற்றின் நோக்கமும் ஓரிரு காட்சிகள் அல்லது வசனங்களின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுவது சிறப்பு. பேய்ப் படங்களில் பேய்க்கு ஒரு ஃப்ளாஷ்பேக் இருக்க வேண்டும் என்பது உட்பட பல கிளிஷேக்களை உடைத்தெறிகிறது இந்தப் படம். அதற்காகவே திரைக்கதை எழுதி படத்தை இயக்கியிருக்கும் விஜய்யைப் பாராட்டலாம்.
இது மும்மொழிப் படம் என்பதால் பல பாத்திரங்கள் தமிழில் பேசாமல் டப்பிங் செய்யப்பட்டிருப்பதும், சில காட்சிகளில் செட்டிங்குகளும் உடைகளும் தமிழுக்கு மிக அந்நியமாக இருப்பதும் ஒரு டப்பிங் படம் பார்க்கிறோம் என்ற உணர்வைத் தருகின்றன. இரண்டாம் பாதியில் சற்று நீளத்தைக் குறைத்திருக்கலாம். இவை இரண்டைத் தவிர படத்தில் பெரிய குறை ஒன்றும் இல்லை.
”இத்தனை ஆண்டுகள் ஏன் நடிக்கவில்லை?” என்று கேட்கவைக்கும் வகையில் சிறப்பாக நடித்திருக்கிறார் பிரபுதேவா. பல காட்சிகளில் அவரது எக்ஸ்பிரஷன்களும் வசன உச்சரிப்புமே சிரிக்கவைத்துவிடுகின்றன. எமோஷனல் காட்சிகளிலும் குறைவைக்கவில்லை.
தமன்னாவுக்கு கட்டுப்பட்டியான கிராமத்துப் பெண், மாடர்னான துணிச்சலான நடிகை என்ற இருவேறு வேடங்கள். இரண்டிலும் தன்னுடைய சிறந்த பங்களிப்பைத் தந்திருந்தாலும் மாடர்ன் நடிகை வேடத்தில்தான் அதிகமாக ஈர்க்கிறார். அந்த நடையிலேயே மிடுக்கையும் தன்னம்பிக்கையையும் வெளிப்படுத்திவிடுகிறார். கிராமத்துப் பெண் வேடத்துக்கு மேக்கப் கொஞ்சம் சொதப்பல்.
சோனு சூத் பாத்திரத்துக்குத் தேவையான நடிப்பைத் தந்திருக்கிறார். பாலாஜி வரும் அனைத்து காட்சிகளிலும் சிரிக்க வைத்துவிடுகிறார். நாசர் மற்றும் சதீஷ் ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் மனதில் நிற்கிறார்கள். மற்ற துணை நடிகர்களும் குறையில்லாத நடிப்பைத் தந்திருக்கிறார்கள்.
கோபி சுந்தரின் பின்னணி இசை படத்துக்கு பெரும்பலம். ஹாரர் காட்சிகளிலும் எமோஷனல் காட்சிகளிலும் தாக்கத்தை அதிகரிக்கும் இசையைத் தந்திருக்கிறார்.
சாஜித்-வாஜித், விஷால் மிஷ்ரா ஆகியோரின் பாடல்களில் பாலிவுட் நெடி தூக்கல். ஆனால் `சல்மார்` பாடலை துள்ளல் மெட்டுக்காகவும் பிரபுதேவாவின் அசாத்திய நடனத்துக்காகவும் ரசிக்க முடிகிறது. மற்ற பாடல்களில் பிரபுதேவா அல்லது தமன்னா அல்லது இருவருமே சிறந்த நடன விருந்து அளித்திருக்கிறார்கள்.
மனுஷ் நந்தனின் ஒளிப்பதிவில் பாடல்களும் சினிமா ஷுட்டிங் காட்சிகளும் ரிச்சாகத் தெரிகின்றன. அதேபோல் ஹாரர் காட்சிகளில் சரியான ஒளியமைப்பும் கோணங்களும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் குறைவாகவும் குறையில்லாமலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
மொத்தத்தில் `தேவி`, சில குறைகள் இருந்தாலும் நிஜமாக பயமுறுத்தி, நிறைய சிரிக்கவைத்து, நிறைவான அனுபவத்தைத் தரும் படம்.
மதிப்பெண்:-3/5
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments