பிரபுதேவாவின் அடுத்த பட டைட்டில், தயாரிப்பாளர் அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,August 30 2018]

பிரபுதேவா நடிப்பில் கடந்த வாரம் வெளியான 'லஷ்மி' திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இன்று அவர் நடிக்கவுள்ள புதிய படம் ஒன்றின் பூஜை சற்றுமுன் சென்னையில் நடந்தது. இந்த படத்தை பல வெற்றி படங்களை தயாரித்த ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

பிரபுதேவா-ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா இணையும் இந்த படத்திற்கு 'தேள்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஹரிகுமார் என்பவர் இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு சத்யா இசையமைப்பாளராகவும், விக்னேஷ் வாசு ஒளிப்பதிவாளராகவும், ப்ரவீண் கே.எல். படத்தொகுப்பாளராகவும் பணிபுரியவுள்ளனர்.

இந்த படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை உள்பட மற்ற நட்சத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் இதுகுறித்த தகவல்கள் மிக விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் கூறியுள்ளனர். பிரபுதேவா ஏற்கனவே 'யங் மங் சங்', 'சார்லி சாப்ளின் 2', 'பொன்மாணிக்கவேல்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.