சலங்கை ஒலி-சங்கராபரணம் போன்ற படங்களை இயக்க ஆசை. பிரபுதேவா
- IndiaGlitz, [Saturday,December 19 2015]
ஒவ்வொரு வருடமும் சென்னை நகரில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சி 'சென்னையில் திருவையாறு' என்பது அனைவரும் அறிந்ததே. இவ்வருடத்தின் இந்த நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. நேற்றைய தொடக்கவிழாவில் பிரபல நடிகர், இயக்குனர் பிரபுதேவா மற்றும் பழம்பெரும் பாடகி பி.சுசீலா உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் திருவுறுவ சிலையை பி.சுசீலா திறந்து வைத்தார்.
இந்த விழாவில் பேசிய பிரபுதேவா, "என்னை ஏன் இந்த விழாவுக்கு அழைக்கிறீர்கள் என்று இந்த விழாவை நடத்தும் லஷ்மன் ஸ்ருதியிடம் கேட்டேன். அதற்கு அவர் 'நீங்கள் ஒரு பரதநாட்டிய கலைஞர்' என்று கூறினார். நானே அதை மறந்துவிட்டேன். எனக்கு ஞாபகப்படுத்தியதற்கு லஷ்மன் ஸ்ருதிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தற்போது உள்ள நடன முறைகளை வைத்தே படம் இயக்கி வருகிறேன். எனக்கும் சலங்கை ஒலி', சங்கராபரணம் படங்களைப் போல் படம் இயக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது. விரைவில் அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவேன்.
மேலும் இந்த இசை நிகழ்ச்சி மூலம் சென்னையில் பெய்த கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நிவாரண தொகைகள் வழங்க இருக்கிறார்கள். சந்தோஷமாக இருக்கிறது. நீங்களும் தங்களால் முடிந்ததை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குகள்' என்று கூறினார்.