கரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை
- IndiaGlitz, [Wednesday,January 29 2020]
கரீபியன் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கியூபா, ஜமைக்கா உள்ளிட்ட சில தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப் பட்டது. கரீபியன் கடலில் நேற்று 7.7 ரிக்டர் அளவிலான மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மெக்சிகோவில் இருந்து ஃப்ளோரிடா வரையில் இந்த நிலநடுக்கம் உணரப் பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
வணிகக் கட்டிடங்கள், வீடுகள் போன்றவை அதிர்வுகளால் குலுங்கியது. இதனால் அச்சமடைந்த பொது மக்கள் தங்கள் வீடுகளை விட்டு சாலைகளில் தஞ்சமடைந்தனர். இரவு முழுவதும் சாலை வீதிகளிலேயே பயத்துடன் இருக்க வேண்டி இருந்தது.
கியூபா, ஜமைக்கா, கேமான் போன்ற தீவுகளில் 10 கி.மீ (6.2 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் கியூபாவை ஒட்டியுள்ள சில தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப் பட்டிருந்தது. கடற்கரையை ஒட்டியுள்ள மக்கள், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப் பட்டது. ஃப்ளோரிடாவின் கட்டிடங்களில் வசிப்பவர்களை தங்களது இடங்களில் இருந்து வெகு தொலைவிற்கு செல்லுமாறு அந்நாட்டு பாதுகாப்பு துறை கேட்டுக் கொண்டது.
சுனாமி பாதிப்பு இல்லை
பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் (P.T.W.C) விடுத்த சுனாமி எச்சரிக்கை தற்போது திரும்ப பெற்றுக் கொள்ளப் பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் இருந்து சுமார் 300 கி.மீ. (186 மைல்) தொலைவில் அமைந்துள்ள தீவுகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்றும், அபாயகரமான சுனாமி அலைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் (P.T.W.C) முன்னதாகத் தெரிவித்தது.
இன்று காலை சர்வதேச சுனாமி ஆய்வு மையம் வெளியிட்ட ஒரு அறிக்கையில் “சுனாமி அச்சுறுத்தல் இப்போது இல்லை” எனவும் ”மக்கள் அச்சப்பட வேண்டாம்” எனவும் கேட்டுக் கொள்ளப் பட்டது. சுனாமி காரணமாகக் கட்டிடங்களுக்கு சிறிய அளவிலான பாதிப்புகள் மட்டுமே ஏற்பட்டன. உயிர் சேதங்கள் எதுவும் இல்லை என்பதும் உறுதி செய்யப் பட்டுள்ளது. M7.7 அளவுள்ள இந்த நிலநடுக்கம் பக்க வாட்டில் ஏற்பட்டதால் மட்டுமே பாதிப்புகள் குறைவாக இருந்தது என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.