close
Choose your channels

Power Paandi aka Pa Paandi Review

Review by IndiaGlitz [ Thursday, April 13, 2017 • தமிழ் ]
Power Paandi aka Pa Paandi Review
Banner:
Wunderbar Films
Cast:
Rajkiran,Nadhiya,Prasanna,Chaya Singh,RoboShankar,Dhanush,Gautham Menon
Direction:
Dhanush
Production:
Dhanush
Music:
Sean Roldan
Movie:
Power Paandi

பொதுவாக கதாநாயகர்கள் இயக்குனர்கள் ஆகும்போது ஆக்‌ஷன் கதைகளைத் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் தனுஷ் ‘ப. பாண்டி’ படத்தின் மூலம் செண்டிமெண்ட் கலந்த காதல் கதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். கதாநாயகனாக 60 வயது கதபாத்திரதில் ரஜ்கிரணை நடிக்க வைத்திருக்கிறார். இத்தனை வித்தியாசங்களை தான் இயக்கும் முதல் படத்திலேயே முயற்சி செய்து ஈர்த்திருக்கும் தனுஷ் ஒரு இயக்குனராகவும் கதை,திரைக்கதை வசன எழுத்தாளராகவும் எந்த அளவு ஈர்த்திருக்கிறார் என்பதை விமர்சனத்தில் காண்போம்.

சினிமாத் துறையில் ஸ்டண்ட்  மாஸ்டராகப் புகழ்பெற்றவர் பவர் பாண்டி. முதுமைக் காலத்தில் மனைவியை இழந்து மகன் ராகவனை (பிரசன்னா) அண்டி வாழ்கிறார். பேரன் (மாஸ்டர் ராகவ்), பேத்தி (பேபி சவ்வி) மீது உயிரையே வைத்திருக்கிறார். அவர்களும் தாத்தாவை மிகவும் நேசிக்கிறார்கள்.

அப்பாவை வசதியான நிலையில் வைத்திருந்தாலும் அவரது செயல்பாடுகளால் விளையும் சின்னச் சின்ன பிரச்சனைகளைத் தாங்கிக்கொள்ள முடியாமல்  எரிச்சலடையும் ராகவன் (பிரசன்னா) அடிக்கடி அவரைக் கடிந்துகொள்கிறான், மகனின் நிலையைப் புரிந்துகொண்டு எப்போதும் பணிந்துபோகும் பாண்டி, ஒரு கட்டத்தில் மகனிடம் தனது நீண்ட நாள் கோபத்தையும் ஆற்றாமையையும் கொட்டிவிடுகிறார். பிறகு அதனால் மனமுடைந்து மகன் குடும்பத்தைவிட்டு விலகிச் செல்கிறார்.

தனது புல்லட் பைக்கில் நீண்ட பயணத்துக்குக் கிளம்பும் பாண்டிக்கு திடீரெண்டு தனது இளம் பிராயத்துக் காதலி பூந்தென்றலைத் தேடிக் கண்டுபிடிக்கலாம் என்ற யோசனை வருகிறது. காதலியைத் தேடிச் செல்கிறார்.

அதன் பிறகு அவருக்கு ஏற்படும் அனுபவங்களே மீதிக் கதை. ஹாரர் காமடி, த்ரில்லர், ஆக்‌ஷன் படங்கள் அதிகமாக வந்துகொண்டிருக்கும் சூழலில் இப்படி ஒரு எமோஷனலான படத்தைப் பார்த்து நீண்ட நாட்களாகிறது என்ற ஆசுவாசம் கிடைப்பதோடு அந்த எமோஷன் சரியாக ரசிகர்களுக்குக் கிடத்தப்பட்டிருப்பதில் வெற்றிபெறுகிறார் இயக்குனராக அறிமுகமாகியிருக்கும் தனுஷ். ஒரு வயதான மனிதரைச் சுற்றி படம் நெடுக மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் நிறைந்த தருணங்களை வைத்து துளிக்கூட மெலோட்ராமா  இல்லாமல் மனதைத் தொடும் படைப்பாக வந்திருக்கிறது ’பா.பாண்டி’. 

ராஜ்கிரணின் பாத்திரப்படைப்பும் அந்தப் பாத்திரத்தை அவர் கச்சிதமாக உள்வாங்கி வெளிப்படுத்தியிருக்கும் விதமும் தனுஷின் சிந்தனையை அப்படியே திரைக்குக் கொண்டுவர உதவியிருக்கிறது  அந்தக் கதாபாத்திரம் நம் வீட்டு முதியவர் போல் இருப்பதால் அவரைப் பின்தொடர்வதும் அவரது சந்தோஷங்களுக்கு நாமும் மகிழ்வதும் அவரது ஏமாற்றங்களுக்கு நாமும் ஏங்குவதும் சுலபமாக இருக்கிறது.

முதல் பாதியில் சின்னச் சின்ன குறைகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் சுவாரஸ்யமாகவும் ரசனையாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதை இரண்டாம் பாதியில் பவர் பாண்டியின்  ஃப்ளாஷ்பேக் காதல் காட்சிகளில் கடுமையாக சறுக்குகிறது. அது ஒரு வழக்கமான காதல் கதைதான் என்று படத்திலேயே சொல்லிவிடுகிறார்கள். அது தெரிந்திருந்தும் ஏன் அதற்கு இவ்வளவு அதிக நேரம் ஒதுக்கி வேண்டும்? காட்சிகளில் சுவாரஸ்யம் இல்லை என்பதோடு அவை இந்தப் படத்தின் தன்மையுடன் ஒட்டவில்லை என்பதும் ஒரு பெரும் குறை. இந்தக் காட்சிகளில் தனுஷ், மடோனா செபாஸ்டியன் இருவரது நடிப்பிலும் குறையில்லை. ஆனால்  தனுஷ்தான் இளவயது ராஜ்கிரண் என்பதை ஏற்றுக்கொள்ள சற்று கடினமாக இருக்கிறது. மற்றபடி யதார்த்தமாக இருக்கும் படத்தில் இதுபோன்ற சினிமாத்தனமான விஷயங்களை ஜீரணித்துக்கொள்வது கொஞ்சம் கடினமாக உள்ளது.

ஃபலாஷ்பேக் முடிந்த பின் பல ஆண்டுகளுக்குப் பின் காதலர்கள் சந்தித்துக்கொள்ளும் விதமும் அவர்களுக்கிடையே நடக்கும் அன்புப் பரிமாற்றமும் அதன் மூலம் அவர்களது வாழ்வில் ஒரு புத்துணர்ச்சி கிடைப்பதும் அழகாகவும் நெகிழ்ச்சியாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வயது முதிர்ந்த நிலையில் தங்களுக்கென்று ஒரு குடும்பம் இருக்கும்போது தங்கள் காதலைப் புதுப்பித்துக்கொள்ளலாமா வேண்டாமா என்ற அவர்களின் மனப்போராட்டம் சிறிய அளவில் என்றாலும் முதிர்ச்சியுடன் காட்சிபடுத்தப்பட்டுள்ளன. இறுதியில் எந்த விதமான தீர்ப்பும் கூறாமல், முடிவை பார்வையாளரிடமே விட்டிருப்பது பாராட்டுக்குரியது.

ஃப்லாஷ்பேக்கின் நீளத்தைக் குறைத்து ராஜ்கிரண் அவரது காதலியை மீண்டும் சந்தித்தபின் நிகழும் காட்சிகளை அதிகரித்திருந்தால், அவர்களது உளச்சிக்கல்களைக் காண்பித்திருந்தால் ‘பா.பாண்டி’ இன்னும் சிறப்பான படமாக இருந்திருக்கும்.
 
நம் வீட்டு முதியவர்களை நம்மை அறியாமலேயே நமது அடிமைகளாக நடத்துகிறோம் என்று இளையவர்களுக்கு ஒரு செய்தியையும் பிள்ளைகள், பேரன் பேத்திகளைத் தாண்டி முதுமையிலும் ஒரு வாழ்க்கை இருக்கிறது அதை வாழ முயற்சிக்க வேண்டும் என்று முதியவர்களுக்கும் ஒரே படத்தில் இரண்டு மெசேஜ்களை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் தனுஷ். அதற்காகவும் சிறப்புப் பாராட்டுக்கள்.

ராஜ்கிரண், படத்தைத் தன் தோள்களில் தாங்கும் தூண் என்று சொல்வது மிகையல்ல. அவரது நடிப்புத் திறமையைப் பல படங்களில் ரசித்திருந்தாலும் இந்தப் படத்தில் ஜீன்ஸ்-டீஷர்ட் போட்டுக்கொண்டு ஆங்கிலம் பேசுவதும், காதலியை சந்திக்கப்போகும் தவிப்பையும் குறுகுறுப்பை வெளிப்படுத்துவதும். அவரது துணை நிரந்த்ரமாகக் கிடைத்துவிடாதா என்ற ஏக்கத்தை வெளிப்படுத்துவதும் புதுமையாகவும் ரசிக்கும்படியும் உள்ளன.

ரேவதி...! தோற்றத்திலும் நடிப்பிலும் முதிர்ச்சியின் அழகை அப்படியே திரையில் கொண்டுவந்திருக்கிறார். 80களில் இளைஞர்களாக இருந்தபோது இவர்மீது மையல்கொண்டவர்கள் இந்தப் படத்தின் மூலம் அதை மீண்டும் புதுப்பித்துக்கொள்வார்கள். கிளைமேக்ஸ் காட்சியில் வசனமே இல்லாமல் ஒரு பார்வையின் மூலம் உணர்வுகளை வெளிப்படுத்தும் இடம் அற்புதம்.

ராஜ்கிரணின் மகனாக பிரசன்னா ,  முதல் பாதியில் அப்பாவிடம் கண்டிப்பையும் இரண்டாம் பாதியில் அப்பாவை இழந்த வேதனையையும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். பிரசன்னாவின் மனைவியாக சாயா சிங் , நடிப்பதற்குப் பெரிய வாய்ப்பில்லை என்றாலும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.  மாஸ்டர் ராகவ், பேபி சவ்வி ஆகியோர் அழகாலும் நடிப்பாலும் மனதைக் கொள்ளைகொள்கின்றனர். ராஜ்கிரணின் பக்கத்துவீட்டு இளம் தோழனாக வரும் ரின்சன் சிறப்பான தேர்வு. அவர்கள் இருவருக்கும் இடையில் நிகழும் உரையாடல்கள் பெரிதும் ரசிக்கும்படி இருக்கின்றன.   தனுஷ் மற்றும் மடோனா செபாஸ்டியன் நடிப்பில் குறையில்லை. வித்யுல்லேகா ராமன் கிராமப் பெண்ணாக செயற்கையாக இருக்கிறார். ஒரே காட்சியில் நன்றாக நடித்து அந்தக் காட்சி ஏற்படுத்த வேண்டிய தாக்கத்துக்கு துணைபுரிகிறார்  சின்னத்திரை புகழ் திவ்யதர்ஷினி.  கேமியோ ரோலில் வரும் ரோபோ ஷங்கரும் இயக்குனர் கவுதம் மேனனும் அவர்கள் வரும் காட்சியை படத்தின் சிறப்பான காட்சிகளில் ஒன்றாக ஆக்குகிறார்கள்.

ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் கேட்பதற்கு இதமாக உள்ளன. பின்னணி இசையும் காட்சிகள் கொடுக்க வேண்டிய உணர்வை சரியாகப் பிரதிபலிக்கிறது. வேல்ராஜின் ஒளிப்பதிவில் குறையில்லை. ஸ்டண்ட் சில்வாவின் சண்டைக் காட்சிகள் படத்தின் பலம்.

மொத்தத்தில் ’பா.பாண்டி’,  குறைகளை மீறி ஒரு நெகிழ்ச்சியான, குடும்பத்துடன் பார்த்து ரசிக்கப்பட வேண்டிய படம் என்று ஐயமின்றி பரிந்துரைக்கலாம்.

Rating: 3 / 5.0

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment

Showcase your talent to millions!!

Write about topics that interest you - anything from movies to cricket, gadgets to startups.
SUBMIT ARTICLE