423 விபத்துக்கள் நடந்த பின்னரும் அலட்சியம்.. பரிதாபமாக உயிரிழந்த சென்னை இளம்பெண்
- IndiaGlitz, [Thursday,January 05 2023]
தாம்பரம் - மதுரவாயல் நெடுஞ்சாலையில் 423 விபத்துகள் நேர்ந்த பின்னரும் தேசிய நெடுஞ்சாலை துறையின் அலட்சியம் காரணமாக இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் தனது சகோதரரை நீட் பயிற்சி வகுப்புக்கு அழைத்து சென்றபோது சாலையில் இருந்த பள்ளம் காரணமாக திடீரென கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த லாரி அவர் மீது ஏறியதால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தேசிய நெடுஞ்சாலையில் 32 கிலோ மீட்டர் தூரத்திற்கு வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 11 கிலோ மீட்டர் மட்டுமே முறையாக மூடப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள இடங்களில் மூடுவதற்காக டெல்லியிலிருந்து அனுமதிக்காக காத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே இந்த சாலையில் 423 விபத்துக்கள் நடந்து உள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு விபத்து நடந்து ஒரு உயிரும் பலியாகியுள்ள நிலையில் தற்போது தான் தேசிய நெடுஞ்சாலையினர் சாலையில் உள்ள மேடு பள்ளங்களை சரி செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த விபத்து குறித்து ஜோஹோ நிறுவனத்தின் ஸ்ரீதர் வேம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் மோசமான சாலை காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துஒரு இளம் பெண்ணின் குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த பெண் தங்கள் நிறுவனத்தின் ஊழியர் என்பதால் தங்களுக்கும் மிகப்பெரிய பாதிப்பு என்றும் தெரிவித்துள்ளார்.
இனிமேலும் ஒரு உயிர் பலியாவதற்கு முன்பாவது சாலைகளை சரி செய்ய வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.