சாப்பிடும் போட்டோவை ஷேர் செய்தால் உடல்எடை கூடுமா? பயமுறுத்தும் புது தகவல்!

  • IndiaGlitz, [Tuesday,October 19 2021]

பசிக்கு சாப்பிடாமல் ருசிக்கு, அதுவும் அளவே இல்லாமல் சாப்பிட்டால் உடல்எடை கூடும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் சமீபத்திய ஆய்வு ஒன்று, நீங்கள் சாப்பிடும் உணவு வகைகளை போட்டோக்களாக எடுத்து சோஷியல் மீடியா அல்லது நண்பர்களுக்கு ஷேர் செய்தால்கூட உடல்எடை கூடும் என்று பயமுறுத்துகிறது.

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் சமீபத்தில் உடல்எடை கூடுவது குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளனர். அதில் உணவுகளை சமைத்தோ அல்லது சாப்பிடும்போதோ அதை புகைப்படங்களாக எடுத்து மற்றவர்களுக்கு பகிரும்போது அவர்களுடைய மனநிலை என்னவாக இருக்கிறது? இப்படி ஷேர் செய்வதற்கும் உடல்எடை கூடுவதற்கும் சம்மதம் இருக்கிறதா? என ஆய்வுசெய்தனர்.

அந்த ஆய்வில் சமைக்கும் உணவுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற உந்துதல் பலருக்கும் இருக்கிறது. இந்த உந்துதல் உணவின் மீது அதிக விருப்பதை ஏற்படுத்தி விடுகிறது எனக் கண்டறிந்துள்ளனர்.

உணவுகளை புகைப்படம் எடுக்கும்போது, நாம் உணர்வு ரீதியாக உற்சாகம் கொள்ள ஆரம்பித்து விடுகிறோம். இதனால் அதிகபடியான பசி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாகி விடுகிறது. மேலும் உணர்வு ரீதியாக நாம் உணவுகளை அணுகும்போது ஒருவித உணர்ச்சிவசப் பட்டவர்களாக மாறி அந்த உணவுகளை நம்மை அறியாமல் நேசிக்க ஆரம்பித்து விடுகிறோம்.

இத்தகைய உந்துதல் நமக்கு உணவின் மீதான ஆர்வத்தை அதிகரித்து பசியை தூண்டுகிறது. இதனால் அளவே இல்லாமல் உணவை சுவைத்து பார்க்க வேண்டும் என்று நமது மூளை தூண்டசெய்கிறது.

மேலும் உணவை குறித்த நினைவுகளை நம்முடைய மூளை பதிவு செய்து வைத்துக் கொள்வதோடு, நுகர்வு பற்றிய புரிதலையும் நமக்கு ஏற்படுத்துகிறது. இதனால் நாளடைவில் நாம் உணவு பிரியர்களாக மாறிவிடுகிறோம் என்று விஞ்ஞானிகள் பயமுறுத்துகின்றனர்.

145 நபர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வானது இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு, முதல் குழுவிடம் சாப்பிடும் உணவு வகைகளை புகைப்படம் எடுத்து சோஷியல் மீடியாவில் ஷேர் செய்யும்படி ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இதனால் அந்த குழுவில் இருந்த அனைவரும் சாப்பிடும் உணவுகளை புகைப்படம் எடுத்ததோடு அந்த உணவைப் பற்றி விவரிப்பதில் தேர்ந்த ஒரு வல்லுறர்களாக மாறியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் புகைப்படம் எடுக்கும் குழு உணவுகளை உணர்வு ரீதியாக அணுகுவதும் தெரியவந்துள்ளது. இதனால் அவர்கள் அதிக பசி கொண்டவர்களாக மாறியிருக்கின்றனர். மேலும் நாளடைவில் உடல்எடை அதிகரிப்பதற்கும் இது வழிவகை செய்துவிடுகிறது.

இதற்குமாறாக உணவு வகைகளை புகைப்படம் எடுக்காமல் சாப்பிடும் குழுவிடம் உணவு மீதான ஆர்வம் குறைந்து காணப்படுவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதனால் புகைப்படம் எடுப்பதே தவறு என்று தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம் என்றும் அந்த விஞ்ஞானிகள் அறிவுறுத்துகின்றனர். உணவு விஷயத்தில் அதிக விருப்பம் கொண்டவர்கள் தாங்கள் உண்ணும் உணவு எவ்வளவு கலோரிகளில் இருக்கிறது? உடல்நலத்திற்கு கேடாக அமையுமா? என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இதை நினைவில் வைத்துக்கொண்டாலே போதுமானது எனக் குறிப்பிட்டு உள்ளனர்.