100 டன் மருந்து மாத்திரைகள் டெலிவரி: தபால் ஊழியர்களுக்கு குவியும் வாழ்த்துக்கள்
- IndiaGlitz, [Saturday,April 18 2020]
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை இருக்கும் என்பதால் அதுவரை அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த ஊரடங்கு காலத்தில் தனியார் கூரியர் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதால் இந்திய தபால் துறையின் சேவை தற்போது மிகப்பெரிய அளவில் உள்ளது. நாடு முழுவதும் மருந்து மாத்திரைகள் மற்றும் மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள் ஆகியவைகளை தபால் ஊழியர்கள் டெலிவரி செய்து வருகின்றனர். நாடு முழுவதும் சுமார் இரண்டு லட்சம் தபால் ஊழியர்கள் தொடர்ந்து பணி செய்து கொண்டு இருப்பதாக உள்துறை செயலாளர் புன்யா வத்சவா அவரகள் தெரிவித்துள்ளார்.
கடந்த ஊரடங்கு காலத்தில் மட்டும் 100 டன்கள் மருந்து மாத்திரைகள் மற்றும் மருத்துவ பொருட்களை தபால் ஊழியர்கள் மருத்துவமனைக்கும் மெடிக்கல் கடைகளுக்கும் டெலிவரி செய்துள்ளார்கள் என்பதும், இதில் மருத்துவ உபகரணங்கள் மட்டுமின்றி கொரோனா பரிசோதனை செய்யும் கிட்கள், வெண்டிலேட்டர்கள் ஆகியவையும் அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது
கொரோனா வைரசுக்கு எதிரான போரில் மருத்துவர்கள், நர்ஸ்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், காவல்துறையினர் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் செய்து வரும் பணியை போலவே தபால் ஊழியர்களும் செய்து வரும் இந்த பணியும் பாராட்டுதலுக்குரியது என்பது குறிப்பிடத்தக்கது