ரூ.50 மினிமம் பேலன்ஸ், பரிவர்த்தனைக்கு கட்டணம் இல்லை. வங்கிகள் கெடுபிடியால் மவுசு கூடிய அஞ்சலகங்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
தனியார் வங்கிகள் மட்டுமின்றி பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியும் மினிமம் பேலன்ஸ் உள்பட பல்வேறு நிபந்தனைகளை வாடிக்கையாளர்களுக்கு விதித்து வருகிறது. சேமிப்பு கணக்குகளில் ரூ.5000 மினிமம் பேலன்ஸ் மற்றும் 4 முறைக்கு மேலான பரிவர்த்தனைக்கு கட்டணம் என புதிய நிபந்தனைகளை வங்கிகள் சமீபத்தில் அறிவித்தன. பெரிய பணக்காரர்களுக்கு ரூ.5000 மினிமம் பேலன்ஸ் என்பது ஒரு பிரச்சனையே இல்லை. ஆனால் நடுத்தர மற்றும் ஏழை எளியவர்கள் அந்தந்த மாதங்களில் கிடைக்கும் வருமானமே போதாத நிலையில் இருக்கும்போது ரூ.5000 மினிமம் பேலன்ஸை எப்படி மெயிண்டன் செய்ய முடியும் என்ற கேள்வி எழுகிறது.
இந்நிலையில் அதிக கெடுபிடி இல்லாத, ரூ.,50 மட்டுமே மினிமம் பேலன்ஸ் வைக்கக்கூடிய, எளிதில் சேமிப்பு கணக்கு தொடங்கக்கூடிய அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கு தற்போது மவுசு அதிகரித்து வருகிறது. பெரும்பாலான அஞ்சலகங்களில் தற்போது ஏடிஎம் கார்டு, செக்புக் ஆகிய வசதிகள் இருப்பதால் ஏழை எளியோர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் அஞ்சலகங்களில் அடைக்கலம் அடைகின்றனர். மேலும் அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் கட்டணமில்லாமல் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, தலைமை அஞ்சல்துறை தலைவர் எம்.சம்பத் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வங்கிகளில் தற்போது 4 முறைக்கு மேல் பரிவர்த்தனை மேற்கொண்டால் கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் வங்கி வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே அவர்கள் இப்பிரச்சினையில் இருந்து விடுபட அஞ்சல் நிலையங்களில் சேமிப்புக் கணக்குத் தொடங்கலாம். இந்த சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்சம் ரூ.50 இருந்தால் போதும். அதேபோல், அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்குத் தொடங்கி ஏடிஎம் கார்டு பெற்று அனைத்து வங்கி ஏடிஎம்களிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் கட்டணமில்லாமல் பணம் எடுக்கலாம். அஞ்சல் நிலையங்களில் சேமிப்புக் கணக்குத் தொடங்குவது மிகவும் எளிது. சேமிப்புக் கணக்குத் தொடங்க புகைப்படம் மற்றும் முகவரி சான்றை அளித்தால் போதுமானது.
தமிழகம் முழுவதும் 2,612 அஞ்சல் நிலையங்கள் உள்ளன. இதில், தலைமை அஞ்சல் நிலையங்கள் 94-ம், துணை அஞ்சல் நிலையங்கள் கிராமப் பகுதியில் 1,312-ம், நகர்ப்புற பகுதியில் 1,206-ம் என மொத்தம் 2,518 உள்ளன. இதைத் தவிர பகுதிநேர மாக செயல்படக் கூடிய கிளை அஞ்சல் நிலையங்கள் கிராமப்புற பகுதியில் 8,947-ம், நகர்ப்புற பகுதியில் 331-ம் உள்ளன.
இதைத் தவிர, நாடு முழுவதும் 2,513 அஞ்சல் நிலையங்களில் கோர் பேங்கிங்` வசதி உள்ளது. தமிழகம் முழுவதும் அஞ்சல் நிலைய ஏடிஎம்கள் 97 உள்ளன. எனவே பொதுமக்கள் அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்குத் தொடங்கி எவ்வித கட்டணமும் இன்றி தங்களது பணப்பரிவர்த்தனையை எத்தனை முறை வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம்.
இவ்வாறு சம்பத் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments