நெடுவாசல் உண்ணாவிரதத்தில் பிரபல இயக்குனர் பங்கேற்பு
- IndiaGlitz, [Monday,February 27 2017]
புதுக்கோட்டை அருகில் உள்ள நெடுவாசல் பகுதியில் மீத்தேன் என்ற ஹைட்ரோகார்பன் எடுக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த பகுதி மக்கள் போராடி வருகின்றனர். ஜல்லிக்கட்டு போராட்டம் போலவே இந்த போராட்டத்திற்கும் திரையுலகினர் மற்றும் மாணவர்கள், இளைஞர்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த திட்டத்தை நிறுத்த வலியுறுத்தி நெடுவாசல் பகுதியில் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது. இந்த உண்ணாவிரதத்தில் பிரபல இயக்குனர் பாண்டிராஜ் கலந்து கொண்டார். ஹைட்ரோகார்பன் திட்டம் வந்தால் விவசாயம் செய்ய முடியாத சூழல் ஏற்படும் என்றும் நெடுவாசல் உண்ணாவிரதத்தில் தான் ஒரு செலிபிரிட்டியாக கலந்து கொள்ளவில்லை என்றும் ஒரு விவசாயி என்ற முறையில் கலந்து கொண்டதாகவும் பாண்டிராஜ் தெரிவித்தார். மேலும் இந்த போராட்டம் இளைஞர்களின் கவனத்தை பெற்றுள்ளதால் கண்டிப்பாக வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவிதார்.
பல விவசாய குடும்பங்கள் பல்வேறு காரணங்களால் செத்து மடிந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த திட்டம் விவசாயிகளை அடியோடு அழித்துவிடும் என்றும், ஒரு விவசாயி மகனாக தான் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வது தனது கடமை என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் தான் 23 வயது வரை விவசாயம் செய்து கொண்டிருந்ததாகவும், ஒருவேளை சினிமாவில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டால் மீண்டும் விவசாயத்திற்கே சென்று விடுவேன் என்றும் அதற்காகவே விவசாயத்திற்கான நிலத்தை ஏற்கனவே வாங்கியுள்ளதாகவும் அவர் கூறினார். கமல்ஹாசன், தங்கர்பச்சான் போன்றோர் ஏற்கனவே மீத்தேன் திட்டத்திற்கு எதிர்ப்பு குரல் கொடுத்துள்ள நிலையில் மற்ற திரையுலக கலைஞர்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தர முன்வர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.