இனப்பாகுப்பாட்டு எதிராக கருத்துத் தெரிவித்த போப் மற்றும் ஐ.நா அமைப்பு!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் இனப்பாகுபாட்டு ரீதியில் கொல்லப்பட்டதற்கு எதிராக தற்போது உலகம் முழுக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. நேற்று டிவிட்டரில் இதுகுறித்து கருத்து தெரிவித்த ஐ.நாவின் பொதுச் செயலாளார் அன்டோனியோ குட்டரெஸ் தனது டிவிட்டர் பதிவில், “அமெரிக்காவில் வன்முறைகள் அரங்கேறுவதைக் கண்டு என் மனம் உடைந்து விட்டது. போராட்டக் காரர்கள் குறைகளை கூறுவது அவசியம். ஆனால் அது அமைதியான வழிமுறையில் நடைபெற வேண்டும்” என பதிவிட்டு இருக்கிறார்.
மேலும், போராட்டக் காரர்களை எதிர்கொள்ளும் அதிகாரிகள், கட்டுப்பாடுகளுடன் நடந்து கொள்ள வேண்டும். அனைத்து சமூகத்திலும், பன்முகத் தன்மை என்பது செழிப்பாக இருக்க வேண்டும். அது அச்சுறுத்தலாக மாறிவிடக் கூடாது. இனப்பாகுபாடு என்பது வெறுப்புணர்ச்சி; அதை நாம் அனைவரும் நிராகரிக்க வேண்டும். அனைத்துத் துறைகளைச் சேர்ந்த தலைவர்களும், சமூக ஒற்றுமைக்கு பங்களிப்பு செய்ய வேண்டும். அது ஒவ்வொரு குழுவினரையும் மதிப்புள்ளவர்களாக உணர வைக்கும் எனவும் பதிவிட்டு இருக்கிறார்.
கறுப்பினத்தவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு தற்போது போப் அவர்களும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். “இன வேறுபாட்டை சகித்துக் கொள்ள முடியாது, கண்களை மூடிக் கொண்டிருக்க முடியாது. எந்த வகையிலும், இன பாகுபாட்டை ஏற்க முடியாது” என வாடிகன் சிட்டியில் இருந்து செய்தி வெளியாகி இருக்கிறது.
கறுப்பினத்தவர் கொல்லப்படத்தற்கு தற்போது ஹாலிவுட் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் கிரிக்கெட் விளையாட்டிலும் இனப்பாகுபாடு தொடருகிறது என்ற செய்தியை வெளியிட்டு இருந்தார். இந்த வரிசையில் பிரபல டென்னீஸ் வீராங்கனை நவோமி ஒசாகாவும் சேர்ந்து கொண்டுள்ளார். “சில நேரங்களில் அமைதியாக இருப்பது கூட ஒருவகையில் துரோகச் செயல்தான். இதுபோன்ற செயல் நமக்கு நடக்கவில்லை என்பதால் மீண்டும் அப்படி நடக்காது என்று அர்த்தம் இல்லை. அமைதியாக இருக்க முடியாது. கடைகளை சூறையாடுகின்றனர் என்ற செய்தியை படிக்கும் முன், நிராயுதபாணியாக இருந்த கறுப்பர் இனத்தை சேர்ந்த ஒருவர் எப்படி கொல்லப்படுகிறார் என்பதை பாருங்கள், ஃபிளாய்டு மரணத்துக்கு நீதி வேண்டும்” என்று நவோமி ஒசாகா கூறி இருக்கிறார்.
இவர்களைத் தவிர ஹாலிவுட் பிரபலம் ஜார்ஜ் க்ளூனி, முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா போன்றோரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். மே 25 ஆம் தேதி நடந்த இச்சம்பவத்திற்கு முறையான தீர்வு கேட்டு அமெரிக்காவின் பல மாகாணங்களிலும் இன்னும் போராட்டங்கள் தொடருகின்றன. தற்போது ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணத்துக்கு காரணமான டெரேக் சாவின் என்ற காவல் துறை அதிகாரிமீது முதல் நிலை குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கு முன் பதிவு செய்யப்பட்ட வழக்கை விட இந்த வழக்கில் அவருக்கு 15 ஆண்டுகள் அதிகமான சிறை தண்டனை கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதோடு உடந்தையாக இருந்த மற்ற 3 காவலர்கள் மீதும் இரண்டு அடிப்படைகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout