பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சனின் கடைசி நிமிடங்கள்… காவு வாங்கிய ஒரு மருந்து?
Send us your feedback to audioarticles@vaarta.com
பாப் இசை உலகின் அரசன், மூன் வாக்கர் என அழைக்கப்பட்ட மைக்கல் ஜாக்சன், உலகம் முழுவதும் பல கோடி கணக்கான ரசிகர்களால் விரும்பப்பட்டார். இவரது மறைவை அடுத்து இப்படியொரு கலைஞனுக்கு சாவா? என்று உலகமே அலறித்துடித்த நாட்களை நாம் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது.
கடந்த 25 ஜுன் 2009 அன்று நடந்த இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மைக்கேல் ஜாக்சன் கொலைச் செய்யப்பட்டரா? அல்லது சதியா? எனப் பல சந்தேகங்கள் எழுந்தன. அந்தச் சந்தேகம் இன்று வரையிலும் ஆர்வத்தை ஏற்படுத்தத்தான் செய்கிறது. இதனால் மைக்கேல் ஜாக்சனின் கடைசி நிமிடங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகவே மாறி இருக்கிறது.
மைக்கேல் ஜாக்சனுக்கு உலகம் முழுவதும் எவ்வளவு ரசிகர்கள் இருந்தார்களோ அவ்வளவு எதிர்மறையான விமர்சனங்களும் இருக்கத்தான் செய்தன. காரணம் சிறுவர்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினார், பிளாஸ்டிக் சர்ஜரிக்கள் செய்துகொண்டு மறைமுகமாக வாழ்க்கை நடத்தினார், வாழ்நாள் முழுவதும் சருமக் கோளாறால் அவதிப்பட்டார், மதம் மாறிவிட்டார் எனப் பல்வேறு விமர்சனங்கள் இவர்மீது வைக்கப்பட்டன. மேலும் கடந்த 2005 ஆம் ஆண்டு சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்தார் என்ற வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் சாட்சியங்கள் நிரூபிக்கப்படாததால் அவர் விடுதலை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கை அடுத்து மைக்கேல் ஜாக்சன் சில காலம் தலைக்காட்டாமலே இருந்து வந்தார். இதற்கிடையில் பாப் இசை உலகிற்கு பல்வேறு புது முகங்களும் அறிமுகமாகி இருந்தன. இந்நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு மைக்கேல் ஜாக்சனை வைத்து லண்டனில் கிட்டத்தட்ட 50 மேடை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ஏற்பாடுகளை AEG எனும் நிறுவனம் கவனித்து வந்தது. இதனால் மைக்கேல் ஜாக்சன் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து கொண்டு ரிகர்சல் செய்கிறார்.
இதற்காக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் Carol Wood drive எனும் பெரிய பங்களா வாடகைக்கு எடுக்கப்படுகிறது. கூடவே The Staples centerக்கு மைக்கேல் ஜாக்சன் தினமும் சென்று அங்கு ரிகர்சல் செய்கிறார். இந்நிலையில் ஜுன் 24, 2009 ஆம் தேதி மைக்கேல் எப்போதும் போல ரிகர்சல் முடித்துவிட்டு இரவு 12 மணிக்கு பங்களாவிற்கு திரும்புகிறார். ஆனால் இப்படி திரும்பிய மைக்கேல் மறுநாள் மதியம் 2.26 மணிக்கு மாரடைப்பால் இறந்து விட்டதாக லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள Ronald Regan medical center அறிவிக்கிறது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து ஏறக்குறைய உலக மக்கள் அனைவரும் கண்ணீர் வடிக்கத் தொடங்குகின்றனர். கூடவே பல அறுவைச் சிகிச்சைகளை செய்து கொண்டதால் வந்த விளைவு என மருத்துவ உலகை திட்டவும் செய்கின்றனர். ஆனால் உண்மையில் நடந்தது என்ன என்பது நம்மில் பெரும்பாலானோருக்கு இதுவரை தெரியாமலே இருந்து வருகிறது.
மைக்கேல் ஜாக்சன் லண்டனில் நடைபெற இருக்கும் மேடை நிகழ்ச்சிகளுக்கு ஒப்புக்கொண்ட போதே AEG நிறுவனத்திடம் தனக்கு ஒரு பர்சனல் மருத்துவர் வேண்டும் என கேட்டுக் கொண்டு இருக்கிறார். ஆனால் இதற்கு, லண்டனில் பல கைத்தேர்ந்த மருத்துவர்கள் இருப்பார்களே என AEG நிறுவனம் பதில் அளித்திருக்கிறது. இந்தப் பதிலை ஒப்புக்கொள்ளாத மைக்கேல் ஜாக்சன் தனக்கு கண்டிப்பாக ஒரு பர்சனல் மருத்துவர் வேண்டும் என அடம்பிடித்து இருக்கிறார்.
இதனால் அந்நிறுவனம் Konrad Robert Murray எனும் மருத்துவரை நியமித்து இருக்கிறது. இதற்காக அவருக்கு மாதம் 1,50,000 டாலர்களை கொடுக்கவும் ஒப்புக்கொள்கிறது. இந்த மருத்துவர் கடந்த 2006 ஆம் ஆண்டில் இருந்தே மைக்கேல் ஜாக்சனுக்கு அறிமுகமானவர் என்றும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் மைக்கேல் ஜான்சன் ஒரு பர்சனல் மருத்துவரை ஏன் வைத்துக் கொள்ள வேண்டும்? என்ற கேள்வி எழலாம். இதற்கு முன்பு மைக்கேல் ஜாக்சன் பல மாதங்களாகவே தூக்கம் இல்லாமல் அவதியுற்று வந்து இருக்கிறார். இதற்காக மருத்துவர்கள் அவருக்கு Valium, Lorezepam, Diazepam எனும் பல மருந்துரைகளை பரிந்துரைத்து இருக்கின்றனர். ஆனால் இந்த மருந்து எதுவுமே அவருக்கு எந்த பலனையும் கொடுக்காமல் இருந்து இருக்கிறது.
அந்த சமயத்தில் மைக்கேல் ஜாக்சனுக்கு தற்செயலாக ஒரு பல் அறுவை சிகிச்சை நடைபெற்று இருக்கிறது. இந்த அறுவை சிகிச்சையின்போது மருத்துவர்கள் Anaesthetic Propofol கொடுத்துள்ளனர். இந்த மருந்து மைக்கேலுக்கு தூக்கத்தை கொடுத்ததை உணர்ந்து இருக்கிறார். இதனால் மைக்கேல் Propofol மருந்து வேண்டும் என்று தனக்கு தெரிந்த அனைத்து மருத்துவர்களையும் தொடர்பு கொள்கிறார். ஆனால் அறுவை சிகிச்சைக்கு கொடுக்கும் ஒரு மருந்தை அவருக்கு கொடுக்க ஏறக்குறைய எல்லோரும் தயங்குகின்றனர். மேலும் இது சட்டப்படி குற்றம் என்பதால் சிலர் ஒதுங்கிக் கொள்கின்றனர். இப்படி வந்த ஒரு ஆசைதான் அவர் உயிரையும் காவு வாங்கி இருக்கிறது.
இந்தச் சம்பவத்தில் 25,ஜுன் 2009 அன்று மதியம் 12 மணிக்கு 911 க்கு ஒரு அழைப்பு வருகிறது. அந்த அழைப்பில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு மனிதர் மாரடைப்பால் அவதிப்படுகிறார் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து மருத்துவக் குழு 12.21 மணிக்கு மைக்கேலின் பங்களாவிற்கு விரைகின்றனர். மருத்துவக் குழு மைக்கேலை பார்த்தப் பின்பு சிபிஆர் செய்கின்றனர். ஆனால் எந்த பலனும் இல்லாததால் அவரை Ronald Regan medical center மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனர். பின்பு சிகிச்சை பலனின்றி மைக்கேல் ஜாக்சன் இறந்துவிட்டதாக 2.26 மணிக்கு அறிவிக்கப்படுகிறது.
இந்த வழக்கைப் பொறுத்த வரைக்கும் மைக்கேல் ஜாக்சன் மாரடைப்பால் உயிரிழந்தார் என்றே முதலில் கூறப்பட்டது. ஆனால் அவருடைய இதயம் எந்த பலவீனமும் இல்லாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் முதலில் மைக்கேலின் பர்சனல் மருத்துவரை தேடுகின்றனர். ஆனால் அவர் தலைமறைவாகிறார். இதனால் ஒட்டுமொத்த சந்தேகமும் Murray மீது பாய்கிறது. இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
இந்த விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவருகின்றன. முதலில் சிசிடிவி கேமராக்களை பார்த்த போலீசார் மைக்கேலின் பங்களாவிற்கு வரும் Murray ஒரு பை கொண்டு வருவதைப் பார்க்கின்றனர். அந்த பை எங்கே என போலீசார் கேட்டபோது அதை ஒரு மைக்கேலின் துணி அலமாறியில் வைத்து இருப்பதாக Murray கூறுகிறார். இதனால் அந்த பையை போலீசார் கைப்பற்றுகின்றனர்.
அந்த பையில் ஐவி கொடுக்கப்பட்ட ஒரு டப்பா, அதோடு 100 மில்லி கிராம் அளவுள்ள பயன்படுத்தப்பட்ட Propofol மருந்து பாட்டிலும் கிடைக்கிறது. மேலும் Murray வின் காதலி வீட்டில் இருந்து ஒரு மருந்து ரசீதையும் போலீசார் கண்டுபிடிக்கின்றனர். அதில் 4 காலன் அளவிற்கு Propofol வாங்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்படுகிறது. இதனால் Murray விடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொள்கின்றனர்.
இதையடுத்து மைக்கேல் ஜாக்சன் பல மாதங்களாகவே தூக்கம் இல்லாமல் தவித்து வந்தார் என்றும் அதனால் அவருக்கு தினமும் Propofol மருந்து (அறுவை சிகிச்சைக்கு கொடுக்கும் மருந்து) கொடுத்ததையும் மருத்துவர் Murray ஒப்புக்கொள்கிறார். அதோடு ஜுன் 25 அன்று 100 மில்லி கிராம் Propofol மருந்தை ஐவி மூலம் கலந்து அதை பாட்டில் உள்ள ரோலர் மூலம் மருத்துவர் Murray கட்டுப்படுத்தி இருப்பதும் தெரியவருகிறது.
மேலும் Propofol செலுத்தியபோது முதலில் மைக்கேல் ஜாக்சன் தூங்கியதாகவும் இதனால் மருத்துவர் கழிவறைக்கு சென்றதாகவும் வாக்கு மூலத்தில் தெரிவித்து இருக்கிறார். ஆனால் திரும்பி வந்து பார்த்தபோது அவர் மூச்சின்றி கிடந்தார் என்றும் இதனால் சிபிஆர் செய்ததாகவும் எந்த பலனும் இல்லாத நிலையில் 911 க்கு அழைப்பு விடுத்தாகவும் மருத்துவர் Murray தெரிவித்து இருக்கிறார்.
இதையடுத்து போலீசார் Murray வை கைது செய்கின்றனர். அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் Propofol மருந்தை அவர் தவறுதலாகப் பயன்படுத்தினார் என்று வழக்கு பதிவு செய்யப்படுகிறது. கூடவே மைக்கேல் மூச்சின்றி கிடந்தபோது முதலில் மருத்துவமனைக்கு அழைப்பு விடுத்து இருந்தால் அவரைக் காப்பாற்றி இருக்கலாம் ஆனால் Murray தனது தவற்றை மறைப்பதில் குறியாக இருந்தார் என்றும் அடுக்கடுக்கான குற்றங்கள் சுமத்தப்படுகின்றன.
ஆனால் இந்த வழக்கை பொறுத்தவரைக்கும் மருத்துவர் Murray, மைக்கேல் ஜாக்சனை கொல்லும் நோக்கத்திற்காக Propofol மருந்தை கொடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் Murray மீது இரண்டாம் தர குற்றம் சுமத்தப்படுகிறது. அந்த அடிப்படையில் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் நன்னடத்தை காரணமாக அவர் 2 ஆண்டுகளில் சிறையை விட்டு வெளியே வருகிறார்.
மைக்கேல் ஜாக்சனின் இந்த நிலைமைக்கு யார் காரணம்? Propofol ஐ தவறாக பயன்படுத்த நினைத்ததா?, அல்லது பணத்திற்காக அந்த மருந்தை டஜன் கணக்கில் செலுத்திய மருத்துவரா? பொதுவா உள்ளூரில் “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்ற பழமொழி சொல்ப்படுவது உண்டு. மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் நாம் சளி, இருமல், காய்ச்சலுக்கு மருந்து வாங்குகிறோம். ஆனால் மைக்கேல் ஜாக்சன், புகழின் உச்சாணி, பிரம்மாண்டத்தின் கோபுரம். அவருடைய சக்திக்கு Propofolஐ தவறாக செலுத்திக் கொண்டு உயிரிழந்து விட்டார். இதனால் வலிமையைவிட அறிவியல் பெரியது என்பதை மீண்டும் ஒரு முறை மைக்கேல் ஜாக்சன் கதை நிரூபித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout